ராமேசுவரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா?


ராமேசுவரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா?
x
தினத்தந்தி 23 March 2021 10:59 PM IST (Updated: 23 March 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை தடுக்க ராமேசுவரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ராமேசுவரம்
கொரோனா பரவலை தடுக்க ராமேசுவரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதை தொடர்ந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 6 மாதங்களுக்குப் பிறகு கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததைத் தொடர்ந்து சுற்றுலா இடங்கள் மற்றும் கோவில்கள் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியது. கொரோனா தொற்று பரவல் தொடங்கி ஒரு ஆண்டுகள் முடிந்த நிலையில் அதன் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாக தொடங்கியுள்ளது.
இந்தநிலையில் புண்ணிய தலமான ராமேசுவரம் கோவில் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதிகளில் மிகவும் நெருக்கமாகவும் கூட்டமாகவும் நின்றபடியே கடல் மற்றும் கடற்கரை அழகை பார்த்து ரசித்து வருகின்றனர். தனுஷ்கோடி பகுதிக்கு வரக்கூடிய பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் யாரும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது கிடையாது.
கோரிக்கை
இதேபோல் கோவிலுக்கு வரும் பக்தர்களும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் தரிசனம் செய்து செல்கின்றனர். வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து வரக்கூடிய சுற்றுலாப்பயணிகள் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றாததால் ராமேசுவரத்திலும் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. 
ஆகவே ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் தனுஷ்கோடி கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி சுற்றுலாப்பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வருவதற்கும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கும் சம்பந்தப்பட்ட சுகாதார துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story