திருவாரூரில், நாளை தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் இன்று ஆழித்தேரில் சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது
திருவாரூரில், நாளை (வியாழக்கிழமை) தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நடக்கிறது. இன்று (புதன்கிழமை) தியாகராஜர் சாமி ஆழித்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவாரூர்:-
திருவாரூரில், நாளை (வியாழக்கிழமை) தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நடக்கிறது. இன்று (புதன்கிழமை) தியாகராஜர் சாமி ஆழித்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
பழமையான சிவன் கோவில்
தமிழகத்தில் உள்ள பழமையான சிவன் தலங்களுள் ஒன்று திருவாரூர் தியாகராஜர் கோவில். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்து விளங்கும் இக்கோவில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை அப்பர் சுவாமிகளே நடத்துவதாக ஐதீகம்.
சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், பிறக்க முக்தி அளிக்கின்ற தலமாகவும் திகழ்கிறது. இந்த சிறப்புமிக்க கோவிலுக்கு சொந்தமான தேர் ஆழித்தேர் என்று அழைக்கப்படுகிறது.
நாளை ஆழித்தேரோட்டம்
பல சிறப்புகளை கொண்ட ஆழித்தேரோட்டம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று (புதன்கிழமை) அஜபா நடனத்துடன் கோவிலில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை காலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து 7.30 மணிக்கு ஆழித்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்ட விழா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் பல்வேறு துறையினர் செய்து வருகின்றனர்.
ஆழித்தேரும், ஆயில்ய நட்சத்திரமும்...
பங்குனி உத்திர திருவிழா அஸ்த நட்சத்திரத்தில் கொடியேறி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேர் தேரோட்டம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதியாகும். ஆனால் பல்வேறு காரணங்களால் ஆழித்தேர் திருவிழா கலம் கடந்து நடத்தப்பட்டு வந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 1990, 1991 ஆண்டுகளில் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேேராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்ட விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story