பொள்ளாச்சியில் வேகமாக பரவுகிறது கடந்த 14 நாட்களில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு
பொள்ளாச்சியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கடந்த 14 நாட்களில் 31 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் தெரிவித்து உள்ளார்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி பகுதிகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சி நகராட்சியில் கடந்த ஓராண்டு காலத்தில் 400 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 10 பேர் உயிரிழந்தனா். 378 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 22 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது கடந்த 10-ந் தேதி முதல் 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை அவசியம் பின்பற்ற வேண்டும்.
அபராதம் விதிக்கப்படும்
தேவைப்பட்டால் மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல வேண்டும். நோய் தொற்று ஏற்படாமல் இருக்க அடிக்கடி சோப்பு மூலம் கைகளை கழுவ வேண்டும்.
மேலும் சானிடைசர் (கிருமி நாசினி) பயன்படுத்துவதால் கொரோனா பரவுவதை தடுக்க முடியும். மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.
இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து இடங்களிலும் கொரோனா தடுப்பு மற்றும் முகக்கவசம் அணிதல் குறித்த ஸ்டிக்கர் ஒப்பட்டப்பட்டு, துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story