விசைப்படகில் இருந்து கடலில் தவறிவிழுந்த மீனவர் மாயம்


விசைப்படகில் இருந்து கடலில் தவறிவிழுந்த மீனவர் மாயம்
x
தினத்தந்தி 23 March 2021 11:22 PM IST (Updated: 23 March 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

விசைப்படகில் இருந்து கடலில் தவறிவிழுந்த மீனவர் மாயம் ஆனார்

பனைக்குளம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் அதிக அளவில் மீனவர்கள் வசித்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் இங்கு வந்து கடலுக்கு சென்று மீன் பிடித்து விட்டு திரும்புவது வழக்கம். இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 100-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் உள்ளன. இதில் விசைப்படகு மீனவர்கள் நடுக்கடலில் மீன்களை பிடித்து விட்டு இரவு தங்கி மறுநாள் வருவது வழக்கம். அவ்வாறு தங்கி மீன் பிடிப்பவர்களுக்கு மண்டபம் மீன்வளத்துறையினர் 338 டோக்கன்களை மீன் பிடிக்க செல்ல வழங்கியுள்ளனர். அதன்படி உச்சிப்புளி தீயன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த வேல்முருகன்  (வயது 48) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கார்மேகம் (54), முத்திருளான், முருகன், மோகன் ஆகிய 4 பேர் நேற்று முன்தினம் மண்டபம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். 
அப்போது அதிகாலை 4 மணியளவில் உச்சிப்புளி துத்திவலசை கிராமத்தை சேர்ந்த கார்மேகம் திடீரென விசைப்படகில் இருந்து கடலில் தவறி விழுந்தார். உடனே மற்ற மீனவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதைதொடர்ந்து அந்த பகுதியில் மீன்பிடித்து ெ்காண்டிருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் தேடியும் கார்மேகத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைதொடர்ந்து மண்டபம் மீன்வளத்துறையினர், கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து சென்று தேடியும் கார்மேகம் கிடைக்கவில்லை. கடலில் விழுந்த அவரின் கதி என்ன? என தெரியவில்லை. மேலும் தகவல் அறிந்த கார்மேகத்தின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மண்டபம் கடற்கரை பகுதிக்கு சென்று கடலை நோக்கி கதறி அழுத காட்சி பெரும் சோகத்தை உண்டாக்கியது. இந்த சம்பவம் குறித்து மண்டபம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story