ஜீப்பை கடத்திய வாலிபரை விரட்டிப்பிடித்த போலீஸ்காரர்


ஜீப்பை கடத்திய வாலிபரை விரட்டிப்பிடித்த போலீஸ்காரர்
x
தினத்தந்தி 23 March 2021 11:37 PM IST (Updated: 23 March 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் பட்டப்பகலில் ஜீப்பை கடத்திய வாலிபரை போலீஸ்காரர் விரட்டிப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 47). இவர் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை 8.30 மணி அளவில் புகழேந்தி, பணிமனையில் தொழில்நுட்ப பிரிவுக்கு சொந்தமான ஜீப்பை ஓட்டிவந்து கடலூர் உழவர் சந்தை அருகில் நிறுத்தினார். பின்னர் அவர் சாவியை ஜீப்பிலேயே வைத்து விட்டு, அருகில் உள்ள கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் அங்கு டிரைவருக்கான சீருடை அணிந்து வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், திடீரென அந்த ஜீப்பை கடத்திச் சென்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் புகழேந்தி, உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

விரட்டிப்பிடித்த போலீஸ்காரர்

அதன் பேரில் தனிப்பிரிவு போலீசார் மூலம், மாவட்டம் முழுவதும் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த புதுச்சத்திரம் காவல் நிலைய தலைமை காவலர் சிவஞானமுத்து கடலூர்-சிதம்பரம் சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக ஜீப் ஒன்று அதிவேகமாக சென்றது. இதை பார்த்த போலீஸ்காரர் சிவஞானமுத்து, தனது மோட்டார் சைக்கிளில் பி.முட்லூர் வரை விரட்டிச்சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து, அருகில் உள்ள பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், த.பாளையம் கருப்பஞ்சாவடியை சேர்ந்த செல்வராஜ் மகன் மணிவேல் (வயது 31) என்பதும், தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவேலை கைது செய்தனர். போலீஸ்காரர் ஜீப்பை கடத்திய வாலிபரை சினிமா பாணியில் விரட்டிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே ஜீப்பை கடத்திய வாலிபரை மோட்டார் சைக்கிளில் சென்று விரட்டிப்பிடித்த போலீஸ்காரர் சிவஞானமுத்துவை, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

Next Story