தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தபால் வாக்குப் படிவங்கள் வழங்கும் பணி


தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தபால் வாக்குப் படிவங்கள் வழங்கும் பணி
x
தினத்தந்தி 23 March 2021 11:40 PM IST (Updated: 23 March 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தபால் வாக்குப் படிவங்கள் வழங்கும் பணி நடந்தது

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து, சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்தல் பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடந்தது. பொது தேர்தல் பார்வையாளர்கள் ராமநாதபுரம், முதுகுளத்தூர் தொகுதி சொராப் பாபு, பரமக்குடி தொகுதி விசோப் கென்யே, திருவாடானை தொகுதி அனுரக் வர்மா, காவல் பார்வையாளர் அனூப்யு செட்டி, தேர்தல் செலவின பார்வையாளர் பரமக்குடி, திருவாடானை தொகுதி சவுரப் துபே ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது:-
வாக்குப்பதிவிற்காக 1647 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 80 இடங்களில் அமைந்துள்ள 228 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்காக 8,305 அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்ட பயிற்சி நடந்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு படிவங்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் தளவாட பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை 94 சோதனைகளில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 98 ஆயிரத்து 890 ரொக்கப் பணம் உரிய ஆவணமின்றி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மூலம் முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து ரூ.67 லட்சத்து 76 ஆயிரத்து 420 விடுவிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

Next Story