திருச்சி தொழில் அதிபர், மேலாளர் வீடுகளில் ரூ.9 கோடி சிக்கியது
திருச்சி தொழில் அதிபர் வீட்டில் 2-வது நாளாக வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்தும், அவருடைய நிறுவன மேலாளர் வீட்டில் இருந்தும் கணக்கில் காட்டப்படாத மொத்தம் ரூ.9 கோடியே 20 லட்சம் சிக்கியதாக கூறப்படுகிறது. முக்கிய ஆவணங்களும் சிக்கியது.
கே.கே.நகர்,
திருச்சி தொழில் அதிபர் வீட்டில் 2-வது நாளாக வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்தும், அவருடைய நிறுவன மேலாளர் வீட்டில் இருந்தும் கணக்கில் காட்டப்படாத மொத்தம் ரூ.9 கோடியே 20 லட்சம் சிக்கியதாக கூறப்படுகிறது. முக்கிய ஆவணங்களும் சிக்கியது.
மொராய் சிட்டி அதிபர்
திருச்சி விமான நிலையம் அருகே உள்ள மொராய் சிட்டி பங்குதாரராக இருப்பவர் தொழில் அதிபர் லெரொன் மொராய்ஸ். இவர், செப்கோ பிராப்பர்டீஸ் டெவலப்பர் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரிடம், கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் இருப்பதாக வருமான வரித்துறையினருக்கு புகார் வந்தது.
இதைத்தொடர்ந்து திருச்சி வருமான வரித்துறை துணை இயக்குனர் மதன்குமார் தலைமையிலான 40 பேர் அடங்கிய 3 குழுவினர் நேற்று முன்தினம் தொழில் அதிபருக்கு சொந்தமான திருச்சி ஏர்போர்ட் அருகே மொராய் சிட்டியில் உள்ள பங்களா, திருச்சி கே.கே.நகரில் வயர்லஸ் சாலை சந்திப்பில் உள்ள அலுவலகம் மற்றும் அந்த நிறுவன பெண் மேலாளரின் வீடு ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.
2-வது நாளாக சோதனை
அங்குள்ள ஆவணங்களை ஆய்வு செய்தும், வரவு-செலவு கணக்குகளை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அங்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டதா? என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்தனர்.
நேற்று முன்தினம் காலை தொடங்கிய சோதனை விடிய, விடிய நடைபெற்றது. நேற்று 2-வது நாளாக இரவுக்கு மேலும் அந்த நிறுவனத்தில் சோதனை தொடர்ந்து நடந்தது.
ரூ.9.20 கோடி சிக்கியது
இந்த சோதனையில் கணக்கு காட்டாத வகையில் அவரது நிறுவன பெண் மேலாளர் வீட்டில் இருந்து ரூ.7½ கோடியும், லெரொன் மொராய்ஸ் வீட்டில் இருந்து ரூ.1 கோடியே 70 லட்சமும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் இதுபோன்ற சோதனைகள் நடப்பது தொழில் அதிபர்களிடையே கலக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story