டெல்லியில் அடகு வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்க வேண்டுமானால் தி.மு.க. ஆட்சி மலர வேண்டும்-கனிமொழி எம்.பி. பேச்சு


டெல்லியில் அடகு வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்க வேண்டுமானால் தி.மு.க. ஆட்சி மலர வேண்டும்-கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 24 March 2021 1:51 AM IST (Updated: 24 March 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் அடகு வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்க வேண்டுமானால் தி.மு.க. ஆட்சி மலர வேண்டும் என்று கனிமொழி எம்.பி. திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.


பொன்மலைப்பட்டி,
டெல்லியில் அடகு வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்க வேண்டுமானால் தி.மு.க. ஆட்சி மலர வேண்டும் என்று கனிமொழி எம்.பி. திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.

கனிமொழி பிரசாரம்

தி.மு.க. மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. திருச்சி உறையூரில் நேற்று திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே. என். நேருவை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தவழ்ந்து, ஊர்ந்து சென்று முதல்-அமைச்சர் பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் டெல்லியில் அடகு வைத்துவிட்டார். டெல்லி சொல்வதை மட்டுமே அவர் செய்கிறார்.

 தமிழ்நாட்டைப் பற்றியும், தமிழர்களை பற்றியும் அவர் கவலைப்படவில்லை. அடகு வைக்கப்பட்ட தமிழகத்தின் உரிமைகளை மீட்க வேண்டுமானால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மலர வேண்டும். மு.க.ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க வேண்டும். ஆதலால் நடைபெறவுள்ள தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தி‌.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய சிறப்பு டி.ஜி.பி. யை கோர்ட்டு தலையிட்ட பின்னர்தான் பணியிடை நீக்கம் செய்ய முடிந்தது. இந்த அரசு குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. 

முதியோர் உதவித்தொகை

தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் முதியோர் உதவித்தொகை வழங்கப்படுவதோடு, அவர்கள் பெற்றுவரும் ரூ.1000 உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். 

குடும்ப தலைவிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தளபதி அறிவித்து இருக்கிறார். அந்த தொகை வழங்கப்படும். கொரோனா காலத்தில் வருமானம் இல்லாமல் தவித்த மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கூறினார்.

ஆனால் எடப்பாடிபழனிசாமி ரூ.1,000 மட்டுமே வழங்கினார். தி.மு.க. ஆட்சி அமைந்தால் மீதமுள்ள ரூ.4 ஆயிரமும் உடனடியாக வழங்கப்படும். மகளிர் சுய உதவி குழுக்கள் மீண்டும் புதுப்பிக்கப்படும். 

அவர்களுக்கு மானியத்துடன் சுழல் நிதி, கடன் வழங்கப்படும். இளைஞர்களுக்கு சுய உதவி குழு அமைக்கப்படும். தமிழகத்தில் காலியாக உள்ள 3½ லட்சம் அரசுப் பணிகள் உடனடியாக நிரப்பப்படும். தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்கப்படும். தற்போது தமிழகத்தில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வேலை பெற்று உள்ளனர். 
இவ்வாறு அவர் பேசினார்.
திருச்சி கிழக்கு
இதனைத்தொடர்ந்து திருச்சி முதலியார் சத்திரத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து கனிமொழி பேசியதாவது:-

திருச்சி காந்தி மார்க்கெட்டை கள்ளிக்குடி என்ற இடத்திற்கு மாற்ற முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்பாடு செய்தார். இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் கூட இங்கே இருக்கிற அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்களுக்காக எதையும் செய்யவில்லை.

 தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் காந்தி மார்க்கெட்டில் பல அடுக்குமாடி கடைகள் கட்டிக் கொடுக்கப்படும். அவை நவீனமயமாக இருக்கும். வாழைத்தார் வைப்பதற்கும் குளிர்பதன கிடங்கு அழைக்கப்படும். திருச்சி மக்களின் நீண்ட கால கோரிக்கையான ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைத்துக்கொடுக்கப்படும். சுற்றுச்சாலை அமைக்கப்படும். நவல்பட்டு தகவல் தொழில்நுட்ப பூங்கா மேலும் விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

திருவெறும்பூர்

முன்னதாக நேற்று காலை திருச்சி பொன்மலைப்பட்டியில் திருவெறும்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைஆதரித்து கனிமொழி பேசியதாவது:- அ.தி.மு.க. அரசு மத்தியில் உள்ள பி.ஜே.பி. ஆட்சியின் பினாமியாக செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழ் மொழியின் பெருமையும், சமூக நீதயும், தமிழனின் அடையாளமும் மாறிவிட்டது. 

அதை மீட்டெடுக்க தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். கியாஸ் சிலிண்டர்களுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும். கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும். 5 பவுன் வரை நகை அடகு வைக்கப்பட்டிருந்தால் அந்த கடன் தொகை ரத்து செய்யப்படும்.இவர் அவர் பேசினார்.

Related Tags :
Next Story