வடிகால் வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
வாரணவாசியில் வடிகால் வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்:
சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் அரியலூர்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாரணவாசி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை உயர்த்தி விரிவாக்க பணி சாலையின் இருபுறங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலை உயரமாக இருப்பதால், மழைக்காலங்களில் அருகே உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து விடுவதாகவும், எனவே சாலையின் உயரத்தை குறைக்கக்கோரியும், வீடுகளுக்குள் மழைநீர் புகாமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்தி தரக்கோரியும் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால், அரியலூர்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புக்கம்பியை வைத்து, கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழப்பழுவூர் போலீசார், அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story