வைத்தியநாத சுவாமி கோவிலில் நந்திபெருமான் திருக்கல்யாணம்
திருமழபாடியில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவிலில் நந்திபெருமான் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கீழப்பழுவூர்:
திருக்கல்யாணம்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தை சேர்ந்த திருமழபாடி கிராமத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோவிலில் நந்திபெருமான் திருக்கல்யாண விழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும். நந்தி கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம் நடைபெறும் என்ற ஐதீகத்தின்படி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இத்திருக்கல்யாணத்தை காண ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். அதன்படி இந்த ஆண்டு திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி முன்னதாக திருவையாறு அய்யாரப்பர் கோவிலில் இருந்து வசிஷ்ட முனிவரின் புதல்வி சுயசாம்பிகை தேவியார் பல்லக்கில் பெண் அழைப்பாக கொண்டு வரபட்டார். இதைத்தொடர்ந்து சுந்தராம்பிகை மற்றும் வைத்தியநாத சுவாமி ஒரு பல்லக்கிலும், நந்திபெருமான் மற்றும் சுயசாம்பிகை மற்றொரு பல்லக்கிலும் கோவிலை சுற்றி ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக வளம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலின் முன்பிருந்த திருமண மேடையை வந்தடைந்தனர்.
கண்ணாடி பல்லக்கில் ஊர்வலம்
இதையடுத்து அங்கு சுயசாம்பிகை தேவிக்கும், நந்தி பெருமானுக்கும் எண்ணெய், மஞ்சள், சந்தனம், விபூதி, இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து பல வண்ண மலர்களால் மணமக்களாக அலங்கரிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து யாகபூஜையுடன் வேத மந்திரங்கள் ஓத பக்தர்கள் முன்னிலையில் சுயசாம்பிகை தேவியார் கழுத்தில் நந்திபெருமான் தாலி கட்டப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அட்சதை தூவினர்.
பின்னர் ஊஞ்சலில் அமர்த்தப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. ஊஞ்சலில் ஆடியபடியே சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதைத்தொடர்ந்து சுயசாம்பிகை மற்றும் நந்திபெருமான் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு திருமண கோலத்தில் கோவிலைச் சுற்றி ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டனர். இதில் வீடுகள்தோறும் பக்தர்கள் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்தனர்.
பக்தர்கள் கோரிக்கை
விழாவையொட்டி அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருக்கல்யாணத்தை காண அதிக அளவில் பக்தர்கள் வந்ததால், பலர் கூட்ட நெரிசலில் சிக்கி திணரும் நிலை இருந்தது. பலர் திருக்கல்யாணத்தை பார்க்க முடியவில்லை என்று கூச்சலிட்டபடி இருந்தனர். எனவே அடுத்த முறை அதிக அளவிலான பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில் திருக்கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story