வாக்குச்சாவடி மையங்களில் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை


வாக்குச்சாவடி மையங்களில் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை
x
தினத்தந்தி 24 March 2021 2:13 AM IST (Updated: 24 March 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விருதுநகர், 
மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 வேட்பாளர்கள் 
மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் முறையே 14 மற்றும் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
 சாத்தூரில் 27 வேட்பாளர்களும், சிவகாசியில் 26 வேட்பாளர்களும், விருதுநகரில் 18 வேட்பாளர்களும், அருப்புக்கோட்டையில் அதிகபட்சமாக 29 வேட்பாளர்களும், திருச்சுழியில் 20 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
 இந்தநிலையில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
 எனவே 16 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மாவட்டத்திலுள்ள சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் தொகுதிகளில் மட்டும் வாக்குச்சாவடிமையங்களில் ஒரு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படும்.
தாமதமாகும் 
2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தக்கூடிய வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவுக்கு ஒவ்வொரு வாக்காளரும் எடுத்துக்கொள்ளக் கூடிய நேரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
 எனவே வாக்குப்பதிவு செய்வதற்கு தாமதமாகும் நிலை ஏற்படும். ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் ஒரு வாக்குப்பதிவு எந்திரம் மட்டுமே பயன்படுத்தக்கூடிய நிலையில் அங்கு வாக்குப்பதிவுக்கு ஆகும் நேரம் குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. 
அதிகரிக்க வாய்ப்பு 
எனினும் தற்போதுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நேரத்தை அதிகரித்துள்ளதாலும், மாவட்ட தேர்தல் அதிகாரி மாவட்டம் முழுவதும் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மிக தீவிரமாக நடத்தியுள்ள நிலையில் மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Next Story