தி.மு.க. தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு
தி.மு.க. தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என்று திருப்பூரில் துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
திருப்பூர்
தி.மு.க. தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என்று திருப்பூரில் துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
துணை முதல்அமைச்சர் பிரசாரம்
தமிழக துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சு.குணசேகரன், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.விஜயகுமார், காங்கேயம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கம், பல்லடம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அவருக்கு வேலும், வீரவாளும் வழங்கப்பட்டது.
பிரசாரத்தின் போது துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது
தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை தந்த முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தார். அ.தி.மு.க.விற்கு வந்த சோதனைகளை எல்லாம் தாங்கி 1½ கோடி தூய தொண்டர்களை கொண்ட இயக்கமாக அ.தி.மு.க. இருக்கிறது. ஏழை, எளிய மக்களுக்கான ஏராளமான திட்டங்களை மறைந்த முதல்-அமைச்சர் கொண்டு வந்தார்.
2023-க்குள் கான்கிரீட் வீடுகள்
தமிழ்நாடு முழுவதும் விலையில்லா அரிசி வழங்கினார். இதுபோல் தமிழகத்தில் 2018-ம் ஆண்டில் வீடு இல்லாதவர்கள் 17 லட்சம் பேர் என கணக்கிட்டு வீடு கட்டி கொடுப்பதாக தெரிவித்தார். இதுவரை 6½ லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. வருகிற 2023-ம் ஆண்டுக்குள் வீடு இல்லாத அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
பெண்களுக்கு தொட்டில் குழந்தை திட்டம், திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல் பெண்களுக்கு விலையில்லா மிக்சிகளும் வழங்கப்பட்டுள்ளது. மகப்பேறு நிதி உதவியும் 6 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வேலைக்கு செல்கிற பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனமும் வழங்கப்பட்டு வருகிறது.
19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஆணுக்கு பெண் சரிசமம், நிகர் என்ற நிலையை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிலைநிறுத்தியுள்ளார். இவ்வாறு சமூக பாதுகாப்பு திட்டங்கள் ஏராளமாக அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் அதிகமாக உருவாக்கப்பட்டால் வேலை வாய்ப்பு அதிகமாக உருவாகும். பொருளாதாரம் உயரும்.
கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் ரூ.45 ஆயிரம் கோடிக்கு மட்டுமே தொழிற்சாலைகள் தமிழகம் முழுவதும் உருவாகியது. ஆனால் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் ரூ. 6 லட்சத்து 85 ஆயிரம் கோடிக்கு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு, 19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தது அ.தி.மு.க. அரசு. தமிழகத்தில் 60 சதவீதம் பேர் விவசாயிகள் அல்லது விவசாய தொழில் செய்து வருகிறவர்கள்.
செல்லாத நோட்டு
விவசாயிகளின் நலன் கருதி மானிய விலையிலும், இலவசமாக விதை, உரம், உபகரணங்கள் போன்றவை வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நெல் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. இதற்கு மத்திய அரசு விருதும் தொடர்ந்து 6 ஆண்டுகளாக கிடைத்துள்ளது. இயற்கை சீற்றங்கள், வறட்சியின் போது உடனடியாக நிவாரணம் வழங்கும் ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி இருந்து வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் இந்தியாவிலேயே சிறப்பாக செயல்பட்ட மாநிலம் என தமிழகத்தை பிரதமர் பாராட்டியுள்ளார். இதுதான் ஒரு நல்ல அரசு செய்ய வேண்டிய வேலை. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு. அது கள்ளநோட்டு. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு. அது செல்லும்.
கடந்த தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக தெரிவித்தார்கள் வழங்கப்படவில்லை. ஆனால் அ.தி.மு.க.தேர்தல் அறிக்கைகள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது உள்ள அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் திருமண உதவித்தொகை ரூ.35 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். படித்த பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இது ரூ.60 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மகப்பேறு நிதி உதவி ரூ.21 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 அம்மா குலவிளக்கு திட்டத்தில் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதுபோல் வீடு தோறும் விலையில்லா வாஷிங்மெஷினும் வழங்கப்படும். வருடத்திற்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். இந்த திட்டங்கள் எல்லாம் மக்களை துயரில் இருந்து மீள செய்யும்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இஸ்லாமியர்களை ஹச் புனித பயணத்திற்கு அனுப்பி வைக்கிறோம். கிறிஸ்தவர்களை ஜெருசலேமிற்கு அனுப்பிவைக்கிறோம். இந்து மக்களையும் புனித பயணம் மேற்கொள்ள அனுப்பிவைக்கிறோம். ஆகவே ஒரு பாகுபாடு இல்லாத அரசாக அ.தி.மு.க. அரசு இருந்து வருகிறது. மாணவர்களை படித்து பட்டம் பெற செய்து, அவர்கள் வேலைக்கு சென்று விட்டால், அவர்களது குடும்ப பொருளாதாரம் உயரும்.
49 சதவீதமாக உயர்வு
இதனால் மாணவர்களுக்கு கல்வி சீருடை, சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடி என்று இருந்தாலும், அதில் 3-ல் ஒரு பங்கு நிதியான ரூ.35 ஆயிரம் கோடியை கல்வித்துறைக்காக மட்டும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கினார். இதனால் தமிழகத்தில் படித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உயர்கல்விக்கு சென்ற மாணவர்களின் எண்ணிக்கை 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் கடந்த 20 ஆண்டுகளாக மாணவர்களுக்கு ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் ஆகும்.
தி.மு.க.வினர் ஓட்டல்கள், பியூட்டி பார்லர்களில் அராஜகத்தில் ஈடுபட்டது அனைவரும் அறிந்தது. இதுபோல் தி.மு.க. ஆட்சியில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான நிலங்களை அபகரிப்பு செய்திருந்தனர்.
இதனை மீட்டு உரியவரிடம் அ.தி.மு.க. ஆட்சியில் ஒப்படைக்கப்பட்டது. அமைதியான சூழலில் தொழில் அமைதி தமிழகத்தில் இருப்பதால் தான் வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான கோடிக்கு முதலீடு செய்து வருகிறார்கள். தமிழகத்தில் மின்சார தட்டுப்பாட்டை தீர்க்க முடியாத ஆட்சியாக தான் தி.மு.க. ஆட்சி இருந்தது. காவிரி நடுவர்நீதிமன்ற தீர்ப்பிற்கு அரசாணை பெற்றுத்தந்தது அ.தி.மு.க. அரசு. 10 ஆண்டுகாலம் மக்களுக்கு நல்லாட்சி தந்த அரசு மீண்டும் அமைய அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story