ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா- புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
வேகமெடுக்கும் கொரோனா
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இதே மாதம் தான் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் ஆரம்பத்தில் இதன் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. அதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக படிப்படியாக குறைய தொடங்கியது.
பின்னர் 39 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. அதன் பின்னர் மெல்ல மெல்ல கொரோனா வைரஸ் பரவதொடங்கியது. உச்சகட்டமாக ஒரே நாளில் 200 பேர் வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து வைரசின் தாக்கம் குறைந்து 10-க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டு வந்தது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது.
30 பேருக்கு தொற்று
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 15 ஆயிரத்து 112 ஆக உயர்ந்தது.
அதே நேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் குணமாகி நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 821 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 150 பேர் இறந்துள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 141 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story