வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஜருகுமலை கிராமத்தில் கலெக்டர் ராமன் ஆய்வு


வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஜருகுமலை கிராமத்தில் கலெக்டர் ராமன் ஆய்வு
x
தினத்தந்தி 24 March 2021 4:51 AM IST (Updated: 24 March 2021 4:51 AM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஜருகுமலை கிராமத்தில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.

சேலம்:
ஜருகுமலை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.
ஜருகுமலை
வீரபாண்டி சட்டமன்ற தொகுதி குரால்நத்தம் ஊராட்சி ஜருகுமலை மலைப்பகுதியில் வாழும் மக்கள் வாக்களிப்பதற்காக அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, ஏற்கனவே உள்ள வாக்குச்சாவடிகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை வாக்குச்சாவடிகளில் மின்சாரம், குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். இது குறித்து மாவட்ட கலெக்டர் ராமன் கூறியதாவது:-
கண்காணிப்பு
கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு, முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வாக்காளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வாக்களிக்க ஏதுவாக 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து துணை வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே 299 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,050-க்கும் மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து கூடுதலாக 55 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 354 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4,280 வாக்குச்சாவடிகளில் 223 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. 2,139 வாக்குச்சாவடிகள் மற்றும் துணை வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் முழுமையாக கண்காணிக்கப்பட உள்ளது.
அலுவலர்களுக்கு உத்தரவு
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதாக சென்று வாக்களிக்கும் வகையில் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வாக்குச்சாவடிகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை வாக்குச் சாவடிகளிலும் மின்சாரம், குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்த வேண்டும் என அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் ராமன் கூறினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சடையப்பன், சேலம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரேசன், செந்தில்குமரன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story