தபால் ஓட்டு போடுவதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் பணியாளர்களுக்கு அதிகாரி அறிவுரை
ஊட்டியில் தபால் ஓட்டு போட 776 பேர் விண்ணப்பித்தனர். தபால் ஓட்டு போடுவதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் பணியாளர்களுக்கு அதிகாரி அறிவுரை வழங்கினார்.
ஊட்டி,
சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போட தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் தபால் ஓட்டு செலுத்த தகுதியானவர்கள் 5,001 பேர் இருந்தனர்.
தொடர்ந்து வீடுகளுக்கு சென்று விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது. ஊட்டி தொகுதியில் 776 பேர் தபால் ஓட்டு செலுத்த விண்ணப்பித்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று தபால் ஓட்டு பெறுவது குறித்து மண்டல அலுவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள், போலீசாருக்கான பயிற்சி ஊட்டி எச்.ஏ.டி.பி. அரங்கில் நேற்று நடந்தது.
பயிற்சிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சப்-கலெக்டர் மோனிகா தலைமை தாங்கினார். பயிற்சியில் தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-
தபால் ஓட்டு போட விண்ணப்பித்தவர்கள் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட முடியாது.
விண்ணப்பித்தவர்களின் முகவரியில் தபால் ஓட்டு வழங்கப்படும். அதில் அவர்கள் பந்து முனை பேனா மூலம் டிக் செய்ய வேண்டும். தபால் ஓட்டு போடுவதை வீடியோ பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
தபால் ஓட்டு செலுத்துவதில் அரசியல் கட்சியினருக்கு சந்தேகம் இருந்தால், இதனை முகவர் மூலம் கவனிக்கலாம். தபால் ஓட்டு போட உள்ள நபர்களின் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
கொரோனா பாதிப்பு இருந்தால் நோடல் அலுவலரிடம் அனுமதி பெற்று தபால் ஓட்டு போடலாம். தேர்தலுக்கு முந்தைய நாள் வரை தபால் ஓட்டு பெறலாம். இதற்காக மண்டல அலுவலர், உதவி மண்டல அலுவலர், நுண் பார்வையாளர், போலீசார் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி தொகுதியில் 31 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பார்வையற்றோர் 18 வயதுக்கு மேல் உள்ள ஒரு உதவியாளர் மூலம் ஓட்டு போட அனுமதிக்கலாம். தபால் ஓட்டில் கையொப்பம் போடக்கூடாது.
கொரோனா பாதித்து இருந்தால் வருகிற 31-ந் தேதி வீட்டிற்கு சென்று ஓட்டு பெறப்படும். வீட்டில் வாக்காளர் இல்லையென்றால் ஏப்ரல் 1-ந் தேதி மருத்துவமனைக்கு சென்று பெறப்படும். பதிவான தபால் ஓட்டுகளை தினமும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story