கோவை வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்பு வேலி அமைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
கோவை சட்ட மன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்பு வேலி அமைத்து,பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கோவை,
தமிழக சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு வருகிற 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு மற்றும் தெற்கு, சூலூர், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 சட்ட மன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி.) வைத்து எண்ணப்பட உள்ளன.
எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் இந்த மையத்திற்கு தான் கொண்டுவரப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இங்கு 10 தொகுதிகளுக்கும் தனித்தனியாக ஸ்ட்ராங் ரூம் எனப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்கும் அறைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் அங்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ள அறைகளில் உள்ள ஜன்னல்கள் அனைத்தும் இரும்பு வலை கொண்டு முதலில் மூடப்படும். தொடர்ந்து மரப்பலகைகள் கொண்டு சிறிது கூட இடைவெளி இன்றி முழுவதுமாக ஜன்னல்கள் மூடப்படும்.
அந்த அறைக்கு செல்லும் கதவு மட்டுமே திறந்து இருக்கும் மீதி வழிகள் எல்லாம் அடைக்கப்படும். வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்ததும் அறைக்குள் வைக்கப்பட்டு கதவு பூட்டப்பட்டு அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை நாளன்று வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வாக்கு எண்ணும் இடத்திற்கு வருவதற்காக தனிப்பாதையும், தடுப்பு வேலியும் அமைக்கப்பட உள்ளது.
முக்கிய பிரமுகர்கள் வந்து செல்ல தனிப்பாதை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறை, வாக்கு எண்ணும் அறை உள்பட அனைத்து இடங்களிலும் 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இதற்கான பணி இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும்.
கடந்த சட்ட மன்ற தேர்தலை விட தற்போது கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்ட அறைகளில் 3 அடுக்குகளாக வைக்கப்பட உள்ளது.
இதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் வருகிற 2-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story