தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது அ.தி.மு.க. அரசு தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது அ.தி.மு.க. அரசு என்று தர்மபுரியில் நடந்த பிரசார கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தர்மபுரி,
தமிழக சட்டசபை தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தர்மபுரியில் பிரசாரம் செய்தார். தர்மபுரி 4 ரோட்டில் திறந்த வேனில் நின்றபடி தி.மு.க. வேட்பாளர்கள் தடங்கம் சுப்பிரமணி (தர்மபுரி), பி.என்.பி.இன்பசேகரன் (பென்னாகரம்), பி.கே.முருகன் (பாலக்கோடு), டாக்டர். எம்.பிரபு ராஜசேகர் (பாப்பிரெட்டிப்பட்டி) மற்றும் அரூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஏ.குமார் ஆகியோரை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அதியமான் வாழ்ந்த தகடூர் என்ற தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியது இந்த மு.க.ஸ்டாலின் என்பது இந்த உலகத்துக்கே தெரியும். இப்போது நான் தமிழ்நாட்டுக்கு முதல்-அமைச்சர் வேட்பாளர். தர்மபுரி மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தான் நான் முதல்-அமைச்சர் என்பதை மனதில் வைத்து இந்த மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பதவிக் காலத்தில்தான் நீட் தேர்வு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. இதனால் அதிக மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவ படிப்பில் சேர முடியாத அனிதா உள்பட 14 மாணவ-மாணவிகள் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டது. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட பஞ்சப்பள்ளி குடிநீர் திட்ட தண்ணீர் தர்மபுரி நகராட்சி பகுதிக்கு வருவது நிறுத்தப்பட்டது.
உயர்கல்வித்துறை அமைச்சரால் அந்த துறைக்கோ, அவருடைய தொகுதிக்கோ, இந்த மாவட்டத்திற்கோ எந்த நன்மையும் ஏற்படவில்லை. இதே நிலையில் தான் அ.தி.மு.க.வில் அனைத்து அமைச்சர்களும் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்-அமைச்சர் ஆனார் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது. சசிகலா காலில் அவர் விழுந்தாரா? இல்லையா?. எடப்பாடி பழனிசாமி ஒரு போலி விவசாயி. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேளாண் சட்டங்களை ஆதரித்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. வாக்கு அளித்தது.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அ.தி.மு.க. ஆதரவாக உள்ளது. மேலும், அ.தி.மு.க. அரசு அதிகாரமில்லாத ஆணையம் மூலமாக தமிழக காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பச்சை துரோகம் இழைத்தது. இதை விவசாயிகள் மறக்க மாட்டார்கள். குடிமராமத்து என்ற பெயரில் மணல் கொள்ளை, கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்காதது, நெல் கொள்முதலுக்கு லஞ்சம், புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காதது என தமிழக விவசாயிகளுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று உள்ளது. ஊழல் செய்வது, பொய் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அ.தி.மு.க. ஆட்சி பொற்கால ஆட்சி அல்ல. அடிமை ஆட்சி. இந்த துப்புகெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கி சூடே சாட்சி. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200 இடங்களுக்கும் குறையாமல் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. நான் 15 நாட்களாக தமிழகத்தில் சுற்றி வருகிறேன். மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சியை பார்க்கும் போது 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம் என தெரிகிறது.
பா.ஜனதாவின் மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் பலிக்காது. தமிழகம் பெரியார் மண். இந்த திராவிட மண்ணில் மதவெறி எப்போதும் காலூன்ற முடியாது. தமிழகத்தின் சுயமரியாதையையும், தன்மானத்தையும் பாதுகாக்கவும், மாநில உரிமைகளை காப்பாற்றவும் தி.மு.க. கூட்டணி கட்சிகளை பொதுமக்கள் முழுமையாக ஆதரிக்க வேண்டும். அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அது பா.ஜனதாவின் வெற்றி. அதனால் அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வந்து விடக்கூடாது.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தமிழக மக்களின் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன. கருணாநிதியின் மகனான இந்த ஸ்டாலின் சொன்னதைத் தான் செய்வேன், செய்வதைத்தான் சொல்வேன். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 130 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம்.
தி.மு.க. நடத்திய கிராமசபை கூட்டங்களில் நமது ஆட்சி அமைந்தவுடன் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்த பின்னர் அ.தி.மு.க. அரசு ரூ.12,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டது. அதில் ரூ.5,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.7,000 கோடி பயிர்க்கடன் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தள்ளுபடி செய்யப்படும். தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம், அனைத்து பகுதிகளுக்கும் ஒகேனக்கல் குடிநீர் வழங்கும் திட்டம், சிப்காட், சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கும் திட்டம் என அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
Related Tags :
Next Story