5 வருடம் வராதவர் 5 நிமிடத்தில் வந்து குறைகளை கேட்பேன் என்று கூறுவதை ராஜபாளையம் தொகுதி மக்கள் நம்ப மாட்டார்கள் - தி.மு.க. எம்.எல்.ஏ. மீது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு


5 வருடம் வராதவர் 5 நிமிடத்தில் வந்து குறைகளை கேட்பேன் என்று கூறுவதை ராஜபாளையம் தொகுதி மக்கள் நம்ப மாட்டார்கள் - தி.மு.க. எம்.எல்.ஏ. மீது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 March 2021 8:11 AM IST (Updated: 24 March 2021 8:11 AM IST)
t-max-icont-min-icon

5 வருடம் வராதவர் 5 நிமிடத்தில் வந்து குறைகளை கேட்பேன் என்று கூறுவதை ராஜபாளையம் தொகுதி மக்கள் நம்ப மாட்டார்கள் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. குறித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றார். நேற்று சம்மந்தபுரம் செல்லையா தேவர் டீக்கடை சந்திப்பு, பொன்விழா மைதானம் சந்திப்பு, அம்மன் பொட்டல் தெரு இம்மானுவேல்சேகரன் சிலை அருகில், காமாட்சி அம்மன் கோவில் நான்கு முக்கிய சந்திப்பு, திரெளபதியம்மன் கோவில் தெரு, முத்துராமலிங்க தேவர் திருமண மண்டபம், பூபால்பட்டி வடக்குத்தெரு, நான்கு முக்கிய சந்திப்பு, துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெரு, முனியப்பன்கோவில், அம்பலபுளிபஜார் திடல், தோப்புப்பட்டி மாரியம்மன் கோவில் திடல், தெற்கு வைத்தியநாதபுரம் பகுதிகளில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தேர்தல் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அமைச்சர் பேசும்போது, மத்தியில் பிரதமர் மோடி இருக்கின்றார்.

தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி செய்கின்றார். 10ஆண்டுகள் தமிழகத்தில் அதிமுகதான் ஆட்சியில் உள்ளது.

நான் இந்த மாவட்டத்தில் 10 ஆண்டுகளாக அமைச்சராக பணியாற்றி வருகின்றேன்.

சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம், பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு நான்தான்நிதியை பெற்றுக்கொடுத்து பணிகளை பூமிபூஜை போட்டு தொடங்கி வைத்தேன். ராஜபாளையம் பகுதியில் அனைத்து கண்மாய்களும் தூர்வாரியதால் கண்மாய்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

ராஜபாளையம் நகராட்சிக்கு சாலை அமைக்கும் திட்டத்திற்கு நான் 28 கோடி ரூபாய் நிதி வாங்கி கொடுத்துள்ளேன். இங்குள்ள திமுக எம்.எல்.ஏ. தமிழக சட்டசபையில் தொகுதி குறித்து பேசியதே கிடையாது. 10 மணிக்கு சட்ட சபைக்கு வந்து விட்டு உடனே கிளம்பி விடுவார். ஆனால் இப்போது வாட்ஸ்அப், பேஸ்புக்கிலும் நீங்கள் போன் செய்தால் ஐந்து நிமிடத்தில் உங்களை தேடி வந்து குறைகளை கேட்பேன் என்று கூறி வருகின்றார். ஐந்து வருடமாக வராதவர்

மக்களை சந்திக்காதவர் இப்போது ஐந்து நிமிடத்தில் வருவேன் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஐந்து வருடம் வராதவர் ஐந்து நிமிடத்தில் வருவேன் என்று கூறுவதை தொகுதி மக்கள் நம்ப மாட்டார்கள் இப்போது எல்லாம் யாரையும் ஏமாற்ற முடியாது. நாட்டு மக்கள் தெளிவாக உள்ளனர். ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 2 கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், ரயில்வே மேம்பாலம் உட்பட ஏராளமான பணிகளை நான்தான் கொண்டு வந்துள்ளேன்.

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் ஒவ்வொறு பகுதிகளிலும் முகாம் நடத்தப்பட்டு அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வாங்கி கொடுப்பேன். சிவகாசியில் பட்டாசு, தீபெட்டி தொழிலுக்கு ஜிஎஸ்டி வரி அதிகமாக போட்ட போது நான் தான் தமிழக முதல்வர் இடத்திலும் மத்திய அரசிடம் எடுத்துக்கூறி ஜி.எஸ்.டி. வரியை குறைத்து பட்டாசு, தீப்பெட்டி தொழிலை காப்பாற்றினேன். இது சிவகாசி தொகுதி மக்களுக்கு நன்றாக தெரியும்.

நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டம், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளுக்காக சாலைகள் தோண்டிப்போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளும் விரைவில் முடிக்கப்படும். ஒவ்வொரு பகுதிகளிலும் ஒரு அரசாங்கமே நடைபெற்று வருகின்றது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த தொகுதியில் போட்டியிடுவதை நான் பெருமையாக கருதுகிறேன். இது பெருந்தலைவர் காமராஜர் பிறந்த பூமி, இரண்டு முதல்வர்களை உருவாக்கிய பூமியாகும். பெரிய பெரிய தலைவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி இந்த மாவட்டம். ராஜபாளையம் தொகுதியின் செல்லப்பிள்ளையாக ராஜேந்திரபாலாஜி இருப்பேன். எனக்கு வாய்ப்பு கொடுங் கள். இரட்டை இலைக்கு ஆதரவு கொடுங்கள்.

எடப்பாடியார், அண்ணன் ஓபிஎஸ் தலைமையில் நல்லாட்சி மீண்டும் தொடர வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். ஸ்டாலின் மனுக்களை வாங்கி பெட்டியில் போட்டு நாடகமாடி வருகின்றார். ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் கே.டி.ராஜேந்திரபாலாஜி 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற வரலாற்றை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று பேசினார். பிரச்சாரத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் வீதி வீதியாக சென்று அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Next Story