இடையக்கோட்டையில் தொழிற்பூங்கா அமைக்கப்படும்: மின்மோட்டார் வாங்குவதற்கு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் - அர.சக்கரபாணி எம்.எல்.ஏ.உறுதி


இடையக்கோட்டையில் தொழிற்பூங்கா அமைக்கப்படும்: மின்மோட்டார் வாங்குவதற்கு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் - அர.சக்கரபாணி எம்.எல்.ஏ.உறுதி
x
தினத்தந்தி 24 March 2021 11:52 AM IST (Updated: 24 March 2021 11:52 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சி அமைந்த வுடன் இடையக்கோட்டையில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்றும், மின்மோட்டார் வாங்குவதற்கு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்றும் ஒட்டன்சத்திரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அர.சக்கரபாணி உறுதி அளித்துள்ளார்.

ஒட்டன்சத்திரம்,

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. மீண்டும் போட்டியிடுகிறார். இவர் ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றியம் ஜவ்வாதுபட்டி, பருமரத்துபட்டி, ஜோகிபட்டி, பெரியமல்லையாபுரம், சோலியப்ப கவுண்டனூர், கோவிந்தாபுரம் உள்பட பல்வேறு இடங்களில் தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒட்டன்சத்திரம் தொகுதியில் கடந்த 5 முறை என்னை வெற்றி பெற செய்ததற்கு கோடானுகோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் ஆதரவுடன், தொடர்ந்து தி.மு.க. சார்பில் 6&வது முறையாக போட்டியிடுகிறேன். எனக்கு தொடர்ந்து உங்கள் நல்ஆதரவை தாருங்கள். நான் எம்.எல்.ஏ.யாக இருந்த காலத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் 2008&ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது, நங்காஞ்சி ஆறு அணையிலிருந்து ரூ.5 கோடி செலவில் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. சுமார் ரூ.12 கோடி செலவில் நல்லதங்காள் அணைக்கட்டு திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஒட்டன்சத்திரம் முதல் வெரியப்பூர் வழியாக மார்க்கம்பட்டி வரை உள்ள சாலை விரிவுபடுத்தப்பட்டது. கேதையறும்பு முதல் இடையகோட்டை வரை உள்ள தார்சாலை விரிவுபடுத்தப்பட்டது. ஒட்டன்சத்திரம்&தாராபுரம் சாலை சுமார் ரூ.18 கோடி செலவில் அகலப்படுத்தப்பட்டு உயரபடுத்தப்பட்டு உறுதியான சாலையாக மாற்றப்பட்டது. ரூ.20 கோடி செலவில் அத்திக்கோம்பை ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. திண்டுக்கல், இடையகோட்டை, கள்ளிமந்தையம், தொப்பம்பட்டி, கீரனூர் வழியாக பொள்ளாச்சிக்கு 3 பஸ்வசதி செய்து கொடுக்கப்பட்டது. திண்டுக்கல் முதல் பொள்ளாச்சி வரை சுமார் ரூ.200 கோடி மதிப்பீட்டில் அகல ரெயில்பாதை கொண்டுவரப்பட்டது. ஒட்டன்சத்திரத்தில் ரூ.1.50 கோடி செலவில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. ஒட்டன்சத்திரத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டது. இப்படி எண்ணற்ற திட்டங்களை மக்களுக்கு செய்துள்ளோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள இடையகோட்டை பகுதியில் பெரிய தொழிற்பேட்டை தொடங்கப்படும். 

விருப்பாச்சி, தாழையூத்து, இடையகோட்டை அணை ஆகியவை சுற்றுலாத்தலம் ஆக்கப்படும். ஒட்டன்சத்திரம் தொகுதியில் மண் ரோடு என்பதே இருக்காது. அனைத்து மண் சாலைகளும் தார்சாலைகளாக மாற்றப்படும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் கொரோனா நிவாரணதொகையாக ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ 4000 வழங்கப்படும் என்றும், குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும், மகளிருக்கு நகர பஸ்களில் இலவச பயண வசதி செய்யப்படும் என்றும், கலைஞர் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மானியத்தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு மின் மோட்டார் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்றும், தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆகவே பொதுமக்கள் அனைவரும் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை 6&வது முறையாக வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. பேசினார். 
இந்த பிரசாரத்தில் வேலுச்சாமி எம்.பி., வடக்கு ஒன்றியசெயலாளர் ஜோதீஸ்வரன் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story