மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலகம் முற்றுகை - மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போராட்டம்
மு.க.ஸ்டாலின் போட்டியிடும் நட்சத்திர தொகுதியான கொளத்தூரில் தேர்தல் அலுவலகத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திரு.வி.க. நகர்,
வருகிற சட்டமன்ற தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பாக ஆதிராஜாராம் என்பவர் களம் காண்கிறார். மேலும். அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பிரதான கட்சிகள் உள்பட 36 பேர் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஜெகதீஷ் குமார் போட்டியிடுகிறார். இந்த நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரி தணிகைவேல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வரிசையில் ஜெகதீஷ் குமார் பெயர் 16-வது இடத்தில் இடம்பெற்று இருந்ததாக தெரிகிறது.
இதையடுத்து இது குறித்து விளக்கம் கேட்பதற்காக ம.நீ.ம.வேட்பாளர் ஜெகதீஷ்குமார், ஊடக பிரிவை சேர்ந்த பிரியங்கா உள்ளிட்ட 50 பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கொளத்தூர் சட்டமன்ற தேர்தல் அலுவலகத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, விதிமுறைக்கு புறம்பான முறையில் தங்கள் கட்சியின் வேட்பாளர் பெயரை பட்டியலில் பின்னுக்கு தள்ளியதாக கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் காரணமாக அயனாவரம் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் அசம்பாவிதம் ஏதும் நடக்காத வண்ணம் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story