குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 எப்படி கொடுக்க முடியும்?- டி.டி.வி. தினகரன் கேள்வி


குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 எப்படி கொடுக்க முடியும்?- டி.டி.வி. தினகரன் கேள்வி
x
தினத்தந்தி 24 March 2021 8:38 PM IST (Updated: 24 March 2021 8:38 PM IST)
t-max-icont-min-icon

முதியோர் உதவித்தொகையே கொடுக்க முடியாதவர்களால் எப்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 கொடுக்க முடியும்?என்று திருவண்ணாமலையில் டி.டி.வி. தினகரன் கேள்வி விடுத்தார்.

திருவண்ணாமலை 

முதியோர் உதவித்தொகையே கொடுக்க முடியாதவர்களால் எப்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 கொடுக்க முடியும?் என்று திருவண்ணாமலையில் டி.டி.வி. தினகரன் கேள்வி விடுத்தார். 

டி.டி.வி. தினகரன் பிரசாரம்

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் ஏ.ஜி.பஞ்சாட்சரம், செங்கம் சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அன்பு ஆகியோரை ஆதரித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:- 

திருவண்ணாமலை தொகுதி மக்கள் நன்றாக யோசித்து வாக்களிக்க வேண்டும். தி.மு.க.வினர் 10 ஆண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இல்லாத காரணத்தினால் இன்றைக்கு எப்படியாவது ஆட்சிக்கு வந்து மக்களின் வரிப்பணத்தை சுரண்டி விடவேண்டும் என்று நினைக்கின்றனர். 

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வீடுகளில் உள்ள சொத்துக்கள், உடைமைகளை சுரண்டி விடுவார்கள் என்பது தான் உண்மை. காரணம் அரசை கிட்டத்தட்ட ரூ.6 லட்சம் கோடி கடனுக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி தள்ளிக்கொண்டு போய்விட்டார். 

கஜானாவில் ஒன்றும் இல்லை. இதனால் தி.மு.க. பொதுமக்களின் உடைமைகளை தான் அபகரிப்பார்கள். அவர்கள் பொதுமக்களின் உடைமைகளை சுரண்டுகின்ற வாய்ப்புகளை கொடுத்துவிடாமல் தமிழகம் அமைதி பூங்காவாக தொடர்ந்து திகழ்ந்திட உண்மையான மக்கள் ஆட்சி நடந்திட நீங்கள் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். 

அ.தி.மு.க.பகல் கனவு

திருவண்ணாமலையில் பா.ஜ.க. போட்டியிடுகிறது. நம்ம ஊருக்கும், பா.ஜ.க.வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு என்று தெரியவில்லை. கூட்டணி கட்சியின் எண்ணிக்கைக்காக திருவண்ணாமலையை பா.ஜ.க.வுக்கு தள்ளிவிட்டுவிட்டார் பழனிசாமி. 

கூட்டணி கட்சியினரை நம்பி நாம் தேர்தலை சந்திக்கிறோம். ஆனால் அ.தி.மு.க.வினர் பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள். 

தமிழ்நாட்டில் பொதுமக்களின் நலனை எல்லாம் பாதிக்கின்ற வகையில் 2 ஆட்சிகள் நடைபெற்று கொண்டு இருப்பதால் தான் அ.தி.மு.க. கூட்டணியை மக்கள் புறம் தள்ளுகின்ற நிலையில் இருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் பணத்தை செலவு செய்து பழனிசாமி எம்.எல்.ஏ. சீட்டுகளை பிடித்து விடலாம் என்று நினைக்கிறார். ஓட்டுக்கு ரூ.1,000, ரூ.2,000 கொடுத்து வாங்கி விடலாம் என்று பார்க்கிறார்கள்.

ரூ.1,500 எப்படி கொடுக்க முடியும்?

மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். உங்கள் வீட்டு பிள்ளைக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும் என்றால், கடனில் தத்தளிக்கும் தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றால், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும் என்றால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வாக்களியுங்கள். 

தேர்தல் அறிக்கையில் என்ன செய்ய முடியும், நடைமுறையில் சாத்தியமானதை தான் நாங்கள் சொல்லி இருக்கிறோம்.

முதியோர் உதவித் தொகையே கொடுக்க முடியாதவர்களால் எப்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 கொடுக்க முடியும்?. தி.மு.க. கூட்டணியும் ரூ.1,000 கொடுப்பதாக சொல்கிறது. 
எங்கிருந்து கொடுக்க முடியும்?. ரூ.6 லட்சம் கோடி கடன் என்று துணை முதல்-அமைச்சர் பட்ஜெட்டின் போது சட்டசபையில் சொல்கிறார்.

வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
‘டான்காப்’ திறக்கப்படும்.

திருவண்ணாமலை பகுதியில் விரிவுப்படுத்த பஸ் நிலையம் ஏற்படுத்தி தரப்படும். மூடி கிடக்கும் எண்ணெய் வித்து தொழிற்சாலையை (டான்காப்) திறந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

காந்திநகர் பைபாசில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த காய்கறி மற்றும் இறைச்சி மார்க்கெட் அமைத்து தரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் அ.ம.மு.க., தே.மு.தி.க. உள்பட கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Next Story