செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி
தேனி அருகே பணப்பட்டுவாடாவை தடுக்க கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தற்கொலை மிரட்டல்
தேனி மாவட்டம் உப்புக்கோட்டையில் குச்சனூர் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சுமார் 160 அடி உயர செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் 30 வயதுடைய வாலிபர் ஒருவர் அந்த செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போடி தீயணைப்பு நிலையத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்தனர்.
பணப்பட்டுவாடா
செல்போன் கோபுரத்தில் ஏறி நின்றவரை கீழே இறங்கி வரும்படி ஒலிபெருக்கி மூலம் போலீசார் அழைப்பு விடுத்தனர்.
ஆனால் அவர் கீழே இறங்கி வர மறுத்தார். பின்பு சிறிது நேரத்தில் அவர் கீழே இறங்கி வந்தார்.
அப்போது ஊழல் மிகுந்த அ.தி.மு.க. அரசு தோற்கவேண்டும், தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று கூச்சலிட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர், உப்புக்கோட்டை மேற்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி வினோத் குமார் (வயது 29) என்றும், தேர்தல் நேர்மையான முறையில் நடக்க வேண்டும் என்றும்,
பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என்பதற்காகவும் அவர் தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story