மூச்சுத்திணறலால் அவதிப்படும் காட்டு யானையை பிடித்து மரக்கூண்டில் அடைத்து தொடர் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் ஏற்பாடு
மசினகுடி பகுதியில் மூச்சுத்திணறலால் அவதிப்படும் காட்டு யானையை பிடித்து மரக்கூண்டில் அடைத்து தொடர் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
கூடலூர்,
கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆண் காட்டு யானை ஊருக்குள் முகாமிட்டு வருகிறது. மேலும் பொது மக்கள் குடியிருப்புகளை அடிக்கடி முற்றுகையிட்டு வருகிறது.
சில சமயங்களில் சாலைகளில் நின்றவாறு போக்குவரத்துக்கு இடையூறு செய்து வருகின்றது. இந்த யானை மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்ததையும் வனத்துறையினர் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.
இதற்கிடையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாவனல்லா பகுதியில் காயங்களுடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை சிகிச்சைக்கு அழைத்து சென்றபோது பரிதாபமாக இறந்தது. இந்த காட்டு யானையின் மீது சிலர் தீப்பந்தங்களை வீசி காயப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மாவனல்லாவில் நடந்துபோல மசினகுடி பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையையும் சமூக விரோதிகள் துன்புறுத்த வாய்ப்புள்ளது என்றும், மேலும் இந்த காட்டு யானை மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வருவதால் அதனை பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதன்படி, மசினகுடியில் இருந்து முதுமலைக்கு காட்டு யானையை நூதன முறையில் அழைத்து செல்லும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
காட்டு யானைக்கு பழங்களை கொடுத்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் அழைத்து சென்றனர். ஆனால் யானை வனத்துறையினரை ஏமாற்றிவிட்டு திரும்பி சென்றுவிட்டது. இதனால் வனத்துறையினர் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
தொடர்ந்து மசினகுடி, வாழைத்தோட்டம், மாவனல்லா, பொக்காபுரம் உள்ளிட்ட இடங்களில் காட்டு யானை முகாமிட்டது. இதனால் அப்பகுதியில் மரக்கூண்டு அமைத்து காட்டு யானையை அதில் அடைத்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். இதையடுத்து காட்டு யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே காட்டு யானையின் உடல்நிலை குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனால் காட்டு யானையை பிடித்து சிகிச்சை அளிக்கும் திட்டம் தள்ளிப்போனது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் காட்டு யானையை பிடித்து சிகிச்சை அளித்தபின் மீண்டும் வனப்பகுதியில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை நீதிமன்றமும் ஏற்று கொண்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மூச்சுத்திணறலால் அவதிப்படும் காட்டு யானையை பிடித்து மரக்கூண்டில் அடைத்து தொடர் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக வாழைத்தோட்டம் சோதனைச்சாவடி அருகே மரக்கூண்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது வருகிறது. தற்போது பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளது. உயர் அதிகாரிகளின் உத்தரவு வந்த பிறகு காட்டு யானையை பிடிக்கும் பணி நடைபெறும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story