ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 526 பேரிடம் தபால் ஓட்டு சேகரிக்கும் பணி


ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 526 பேரிடம் தபால் ஓட்டு சேகரிக்கும் பணி
x
தினத்தந்தி 24 March 2021 10:59 PM IST (Updated: 24 March 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 526 பேரிடம் தபால் ஓட்டு சேகரிக்கும் பணி தொடங்கியது. நீலகிரியில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தபால் மூலம் ஓட்டு போட இந்திய தேர்தல் ஆணையம் வழிவகை செய்து உள்ளது. 

அதன்படி நீலகிரியில் 12 ஆயிரம் பேர் தபால் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். இதில் ஊட்டி தொகுதியில் 526 பேர், குன்னூர் தொகுதியில் 354 பேர், கூடலூர் தொகுதியில் 856 பேர் என மொத்தம் 1,736 பேர் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பித்தனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், சின்னம் அச்சிடும் பணி நடந்தது.

இந்த நிலையில் நேற்று முதல் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் தபால் ஓட்டு கோரிய நபர்களின் முகவரிக்கு நேரடியாக சென்று தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கியது. தேர்தல் பணியாளர்கள் வாக்காளர் பட்டியல், வாக்குச் சீட்டை சரிபார்த்து தபால் ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:- தபால் ஓட்டு கோரி விண்ணப்பித்தவர்கள் குறைவாக உள்ளதால் 5 நாட்களில் தபால் வாக்குகள் பெறப்படும். தபால் ஓட்டுகளை பெற ஊட்டி, குன்னூர் தொகுதிகளில் தலா 5 குழுக்கள், கூடலூர் தொகுதியில் 8 குழுக்கள் என மொத்தம் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் மண்டல அலுவலர், உதவி மண்டல அலுவலர், நுண் பார்வையாளர், போலீசார் இருக்கின்றனர்.

தபால் ஓட்டு செலுத்துபவரிடம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறக் கூடாது. யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது தெரியாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  மேலும் குழுவினர் தபால் ஓட்டு சேகரிக்க எந்த நேரத்தில் எந்த இடத்துக்கு செல்கிறார்கள் என்று அந்த தொகுதி வேட்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் தங்களது முகவர்கள் மூலம் சரிபார்த்து கொள்ளலாம்.

குன்னூர், கூடலூர் தொகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் தபால் ஓட்டுகள் சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. முதல் நாள் செல்லும் போது தபால் ஓட்டு கோரியவர்கள் வீட்டில் இல்லை என்றால், மறுநாள் செல்லும்போது வாக்கு அளிக்கலாம்.  2 நாட்களும் இல்லை என்றால் தபால் ஓட்டு பெறப்படாது. அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story