தமிழகத்தில் இருண்ட ஆட்சி இந்த மாதத்தோடு முடிய பொய்யர்களின் கூட்டத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் விழுப்புரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு


தமிழகத்தில் இருண்ட ஆட்சி இந்த மாதத்தோடு முடிய பொய்யர்களின் கூட்டத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் விழுப்புரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 24 March 2021 11:24 PM IST (Updated: 24 March 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இருண்ட ஆட்சி இந்த மாதத்தோடு முடிய பொய்யர்களின் கூட்டத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று விழுப்புரம் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழுப்புரம், 



 விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் அடங்கிய சட்டமன்ற தொகுதிகளான திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொன்முடி, விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி, விழுப்புரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் ஆகியோரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தும், வானூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வன்னிஅரசுவை ஆதரித்து அவருக்கு பானை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தும்  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  நேற்று மாலை விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் பிரசாரம் செய்தார். 
அப்போது அவர் பேசியதாவது:-

காப்பி அடிக்கிறார் 

விழுப்புரம் எப்போதும் தளபதியின் கோட்டை என்று பொன்முடி சொல்வார். இப்போது நான் தலைவராக வந்துள்ளேன். அடுத்த முறை அது தலைவரின் கோட்டை என்று சொல்ல வேண்டும். அந்த உரிமையோடு ஓட்டு கேட்க வந்துள்ளேன். கலைஞர் முதல் முதலாக பிரசாரம் நாடகம் நடத்திய ஊர் இந்த விழுப்புரம். அந்த ஊருக்கு, நான் வந்துள்ளேன்.

நம்மை எதிர்த்து நிற்கிற ஆளும் கட்சியான அ.தி.மு.க., அதற்கு தலைமை வகித்துள்ள முதல்-அமைச்சராக இருக்க கூடிய எடப்பாடி பழனிசாமி. அவருக்கு என்ன தெரியும், என்று கேட்டால் உறவினர்களுக்கு டெண்டர் விட்டு கொள்ளை அடிப்பதை தவிர அவருக்கு எதுவும் தெரியாது. நான் சொல்வதை பார்த்து காப்பி அடிக்கிறவர் தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தினோம், அதன் பின்னர் ஆளுநரிடம் நாம் மனு அளித்தோம். அதன் பின்னர் முதல்-அமைச்சர் ஆளுநரை பார்த்து, இட ஒதுக்கீட்டை தந்தார்.
அதன்பின்னர் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை 100 நாட்களில் தீர்த்து வைப்பேன் என்று கூறி தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து மக்களிடம் மனு பெற்றேன். ஆனால், 1100 என்று எண்ணை கொடுத்து, உங்களது குறைகளை சொல்லலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டம் ஜெயலலிதா அவர்களால் ஏற்கனவே அறிவித்து செயல்படாத நிலையில் இருக்கிறது. நான் சொல்வதை தான் முதல்-அமைச்சர் செய்கிறார்.

பொய்யர்களின் கூட்டம் 

இந்த மாவட்டத்துக்கு ஒரு அமைச்சராக சி.வி.சண்முகம் உள்ளார். 2012-ம் ஆண்டு அவரிடமிருந்து மாவட்ட செயலாளர், அமைச்சர் பதவியை பறித்தவர் ஜெயலலிதா. அதற்கு என்ன காரணம் என்பதை அவர் மறந்து இருக்க மாட்டார். அதாவது அவர் வகித்த பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் வாங்குவது, ஊழல் செய்வது என்று புகுந்து விளையாடி, அதிகாரிகளை மிரட்டினார்.

 அதனால்தான் அவரது பதவியை ஜெயலலிதா பறித்தார். இந்த முறை மாவட்டத்தின் கோட்டா அடிப்படையில் அமைச்சராக உள்ளார். இது உங்களுக்கு நன்றாக தெரியும். தனது பதவியை பயன்படுத்தி, இந்த மாவட்ட மக்களுக்கு அவர் செய்தது என்ன? என்பது தான் எனது கேள்வி.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது, சுகாதாரத்துறை செயலாளரை விசாரிக்க வேண்டும் என்று சொன்னவர் சி.வி.சண்முகம். அதை அடுத்த நாள் மறந்துவிட்டார். சசிகலா எங்களது சின்னம்மா அல்ல அவர் அம்மா என்று சொன்ன அவர் மறுநாள் மறந்து விட்டார். அதனால் தான் அவரை அதிமேதாவி என்கிறேன். 

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்று சட்டசபையில் சொன்னார் சி.வி.சண்மும். ஆனால் ஏற்கனவே உள்ள திட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் அனைத்து கட்சி தீர்மானம் கொண்டு வந்து குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் அந்த சட்டத்துக்கு அனுமதி வாங்க சி.வி.சண்முகத்துக்கு முதுகெலும்பு இல்லை, எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை.

அந்த சட்டத்தை குடியரசு தலைவர் திருப்பி அனுப்பிய விவரத்தை கூட சட்ட அமைச்சர் சட்டமன்றத்துக்கு தெரிவிக்கவில்லை. குடியரசு தலைவரிடம் இருந்து பதில் வரவில்லை என்று பொய் சொல்லி கொண்டு இருந்தார். பொய்யர்களின் கூட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏப்ரல் 6-ந்தேதி நடக்கும் தேர்தலை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அடிமை ஆட்சி 

தமிழகத்துக்கு துயரமான ஆட்சி இது. ஆகவே இந்த துயரம் கலையப்பட வேண்டும். தமிழகத்துக்கு துக்கமான ஆட்சி இது, இந்த துக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். தமிழகத்திற்கு கலங்கமான ஆட்சி இது, இந்த கலங்கம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். 

கறைபடிந்த ஆட்சி இது, இந்த கறை கழுவப்பட வேண்டும், தமிழகத்துக்கு சீரழித்த ஆட்சி இது, இது சீர்பட நடவடிககை எடுத்தாக வேண்டும். தமிழகத்தை வஞ்சகம், துரோகம் செய்த ஆட்சி. இதை நாம் தூக்கி எரிய வேண்டும். மொத்தத்தில் இந்த ஆட்சி இருண்ட ஆட்சி. அது இந்த மாதத்தோடு முடிய வேண்டும். அதற்காக தான் உங்களை தேடி வந்துள்ளேன். விடியலை உருவாக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.


தமிழக மக்களுக்கு எடுத்து வைக்கிற வேண்டுகோள், இந்த அடிமை ஆட்சி, அராஜக ஆட்சியை ஒழிக்க வேண்டும். இழந்து இருக்கிற உரிமையை நாம் மீட்க வேண்டும். நமது சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்ள நடக்கிற தேர்தல், இதை மறந்துவிடாதீர்கள். மாநில உரிமைகளை பாதுகாக்க, விவசாயிகள் வாழ்வு செழிக்க மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். 

இன்று செஞ்சியில் பிரசாரம்
இதனை தொடர்ந்து விழுப்புரத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு சென்று தங்கினார். தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு மாலை 3 மணியளவில் செஞ்சி கூட்டுசாலைக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலின் அங்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெறும் பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செஞ்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் மஸ்தான், மயிலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மாசிலாமணி, திண்டிவனம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சீதாபதிசொக்கலிங்கம் ஆகியோரை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்து பேசுகிறார்.

Next Story