மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா


மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா
x
தினத்தந்தி 24 March 2021 11:43 PM IST (Updated: 24 March 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

கரிசல்பட்டியில் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.

எஸ்.புதூர், 
கரிசல்பட்டியில் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.
மத நல்லிணக்கம்
எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டியில் ஆண்டுதோறும் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து நடத்தக்கூடிய மத நல்லிணக்க ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா ஷாபான் 1-ம் பிறையில் கொடி ஏற்றம் நடைபெற்று, ஷாபான் 10-ம் பிறையில் சந்தனக்கூடு நகர் வலம் வந்து ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் தர்ஹாவை வந்தடைந்தது.
கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் அனைத்து மக்களும் இணைந்து, வீடுகளில் சர்க்கரை, பேரிச்சம்பழம், பழங்கள் வாங்கி தினமும் பாத்தியா ஓதப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் நார்ஷா எனும் இனிப்பு வழங்கப் பட்டது. இது கரிசல்பட்டி, கே.புதுப்பட்டி, கரியாம்பட்டி என 3 கிராமத்தைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்கள் இணைந்து நடத்தும் விழாவாகும்.
சந்தனக்கூடு
இந்த விழாவிற்கு கரிசல்பட்டி நாட்டாண்மை அபி முகமது தலைமை தாங்கினார். ஜமாத் கமிட்டி தலைவர் சையது முன்னிலை வகித்தார். நிர்வாக குழு கமிட்டி மக்கள் ஷாஜகான், அப்துல் ரஷீது, சாகுல் ஹமீது, இதயத்துல்லா, ரகுமத்துல்லா ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.
விழாவில் நடன குதிரைகள் நடனமாட வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்ட சந்தனக்கூடு, அனைத்து மக்களும் இணைந்து தூக்கி நகர் வலம் வந்தனர். பின்னர் ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் தர்காவிற்கு சந்தனக்கூடு வந்து சேர்ந்தது. அங்கு சந்தனக்கூட்டில் வைக்கப்படிருந்த சந்தனக்குடத்தில் இருந்து சந்தனம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு சாதி, மத பேதமின்றி நடத்தக்கூடிய மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story