நான் நேர்மையானவன் என்பது என்னுடைய வாழ்க்கை


கோவையில் கமல்ஹாசன்
x
கோவையில் கமல்ஹாசன்
தினத்தந்தி 25 March 2021 12:18 AM IST (Updated: 25 March 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

வாங்கும் சம்பளத்திற்கு வரி செலுத்துகிறேன், நான் நேர்மையானவன் என்பது என்னுடைய வாழ்க்கை என்று கோவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்

கோவை,

வாங்கும் சம்பளத்திற்கு வரி செலுத்துகிறேன், நான் நேர்மையானவன் என்பது என்னுடைய வாழ்க்கை என்று கோவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

கோவை அவினாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

எங்களது வாக்குறுதிகளை வெறும்பேச்சாக இல்லாமல் செயலாக மாற்றுவோம். கோவை தெற்கு தொகுதியில் உள்ள அம்மன் குளம் பகுதியில் பார்த்த குறைகள் தமிழகம் முழுவதும் ஏழைகள் வாழும் பகுதிகளிலும் உள்ளன. குடிநீருடன் கழிவுநீர் கலப்பது, தெருவிளக்கு இல்லாதது உள்ளிட்ட பிரச்சினைகள் எல்லா ஊர்களிலும் உள்ளன.

 இதில் தெற்கு தொகுதி விதிவிலக்கு இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனார் உணர்வு எல்லா தமிழனுக்கும் உண்டு. 

என் வீடு என்று சொல்லாமல் நம் வீடு என்று சொல்லும் கோவை மக்கள் என்னை அவர்களின் ஒருவராக நினைத்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது.


இங்குள்ள எம்.எல்.ஏ.க்களால் முடியாமல், தொடர்பில் உள்ளவர்கள் மட்டும் மத்திய அரசை தொடர்பு கொள்ள முடியும் என்றால் அது கூட்டாட்சி இந்தியா இல்லை. 

சாதாரணமாக சைக்கிளில் பிரசார பயணம் செய்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.வின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். 

எம்.எல்.ஏ. யாராக இருந்தாலும் கோரிக்கையை நிராகரிக்கும் பிரதமர் நல்ல பிரதமர் இல்லை. அதை செய்யும் பிரதமர் நல்ல பிரதமர்


நான் நேர்மையானவன்

நடிகர் ராதாரவி சம்பளத்திற்கு பணி செய்கிறார். அவர் செய்யும் பணியை குறைந்தபட்சம் அமைச்சர்கள் செய்வது இல்லை என்பதே எங்களுடைய குற்றச்சாட்டு. 

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து படத்தில் நான் நடித்து உள்ளேன். எனக்கு வந்த பணம் சரியா என பார்த்து தான் வாங்கினேன். வாங்கிய சம்பளத்திற்கு வரியும். கட்டி உள்ளேன். அவர் நேர்மையானவர் இல்லை என்பது என் வாதம். நான் நேர்மையானவன் என்பது என்னுடைய வாழ்க்கை. 

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம், மற்றும் 80 அடி ரோடு உள்ளிட்ட இடங்களில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது

கடன் சுமை ஏறும்

தமிழகத்தில் கடந்த 50 வருட
ங்களாக  போகாத ஏழ்மை இவர்கள் கொடுக்கும் இலவசங்களால் போக போகிறதா?  போகவே போகாது. அது அப்படியே தான் இருக்கும். அவர்கள் இலவசங்கள் கொடுக்க, கொடுக்க ஒவ்வொரு தமிழர்களின் தலையில் கடன் சுமை ஏறி கொண்டே போகிறது. 

அதனை தடுத்து நிறுத்த வேண்டியது உங்களது கடமை. அதற்கு இருக்கும் ஒரே கருவி மக்கள் நீதி மய்யம் மட்டும் தான். அதன் ஒரு சிறு கருவி நான். என்னை கருவியாக பயன்படுத்துங்கள்.

நாங்கள் இலவசமாக மீன் குழம்பு வைத்து தர மாட்டோம். ஆனால் வருடம் முழுவதும் பயன்படுத்தும் தூண்டிலையும், மீன் பிடிக்கும் திறமையும் உங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் எங்கள் திட்டம். அப்படி செய்து விட்டால் நீங்கள் 10 பேருக்கு மீன் குழம்பு செய்து கொடுப்பீர்கள்.

மாற்றுவோம்

அதை செய்யாமல் இருப்பதற்கு காரணம் நீங்கள் உயர்ந்து வறுமை கோட்டிற்கு மேலே வந்து விட்டால் இந்த மாதிரி அயோக்கியர்களை நீங்கள் திரும்பி பார்க்க மாட்டீர்கள். அந்த பயத்தில்தான் ஏழ்மையை ஏழ்மையாகவே வைத்திருக்கிறார்கள். அதில் இருந்து மாறுவோம். மாற்றுவோம். உங்களால் அதனை செய்ய முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மற்றும் கோவை ஒலம்பஸ் பகுதியில் கமல்ஹாசன் பேசிய போது, புதியதாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற இளைஞர் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை கமல்ஹாசனிடம் காண்பித்தார்.

 அப்போது அவர் இளம்தலைமுறையினர் இந்த தேர்தலில் மறக்காமல் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.

Next Story