தோல்வி பயத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வை சபிக்கிறார்
தோல்வி பயத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வை சபிக்கிறார் என்று கடலூரில் தி.மு.க. வேட்பாளர் அய்யப்பனை ஆதரித்து நடந்த பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.
கடலூர்,
கடலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக கோ. அய்யப்பன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் கனிமொழி எம்.பி. திறந்த ஜீப்பில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக மக்கள் ஆட்சி மாற்றம் வர வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். மு.க.ஸ்டாலின் ஆள வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். உங்களை காணும் போது இது தெளிவாக தெரிகிறது. இதை முதல்-அமைச்சரும் தெளிவாக தெரிந்து வைத்திருப்பதால் தான் அ.தி.மு.க.வின் 10 ஆண்டு கால சாதனைகளை பற்றி பேசாமல் தோல்வி பயத்தில் தி.மு.க.வை சபிக்க தொடங்கி விட்டார்.
தோல்வி பயத்தில் சாபம் கொடுக்கும் அளவுக்கு வந்து விட்டார். இப்படிப்பட்ட ஆட்சி நடக்கிறது. தமிழ்நாட்டை கொண்டு போய் டெல்லியில் அடகு வைத்து விட்டார். தன்னை விவசாயி என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி ஏன் விவசாய சட்டங்களை ஆதரித்தார். குடியுரிமை சட்டத்தை ஆதரித்ததும் அவர் தான். தேர்தல் வந்தவுடன், அதை எதிர்ப்பதாக கூறுகிறார்.
வேலைவாய்ப்பு
அதன் அடிப்படையில் தான் சந்தர்ப்பவாத கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சர் பற்றி கீழ்தரமாக பேசி விட்டு, தற்போது அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளார்.
2 உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள். அதில் ரூ.5 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டதாக கூறினார்கள். ஆனால் யாருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு தொழில் துறை அமைச்சர் பதில் சொல்ல வேண்டும். 10 ஆண்டுகளில் எந்த வேலைவாய்ப்பும் உருவாக்கப்படவில்லை.
ஊழல்
23 லட்சம் இளைஞர்கள், இளம்பெண்கள் வேலையில்லாமல் உள்ளனர். கடலூரில், மழை வெள்ள பாதிப்பு பகுதியாக இருப்பதால், நிரந்தர வெள்ள தடுப்பு பணிக்கு 2015-ம் ஆண்டு ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. திருவந்திபுரம் - தேவனாம்பட்டினம் வரை கெடிலம் கரையை பலப்படுத்த ரூ.22 கோடி. ஒதுக்கப்பட்டது. 57 கிலோ மீட்டர் தூரம் கடற்கரையில் கடல் அரிப்பை தடுக்க ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளது.
கொரோனா காலத்தில் முக கவசம், மருந்து, துடைப்பம் வாங்கியதில் கூட ஊழல் நடந்துள்ளது. கடலூர் துறைமுகம் விரிவாக்கத்திற்கு 2017-ம் ஆண்டு ரூ.135 கோடி ஒதுக்கப்பட்டும் பணிகள் நடக்கவில்லை. கருணாநிதி ஆட்சியில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் 3-வது மாநிலமாக இருந்தது. அப்போது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. ஆனால் தமிழ்நாடு தற்போது 14-வது இடத்தில் உள்ளது. இதை மத்திய அரசு தான் கூறி உள்ளது.
நிதி வழங்கவில்லை
மத்திய அரசோடு இணக்கமாக இருந்தால் தான் தேவையான நிதியை பெற முடியும் என்று முதல்-அமைச்சர் கூறி வருகிறார். ஆனால் தமிழகத்தில் மழை, வெள்ளம், புயல் பாதிப்புகளுக்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. அதை விட குறைவாக தான் வழங்கியது. தமிழக மக்களுக்கு எந்த உதவியும் செய்யாத ஆட்சி மத்தியில் உள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 3 லட்சத்து 50 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். தொழிற்சாலைகளில் தமிழக இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலை வழங்கப்படும்.
கடலூரை மாநகராட்சியாக தரம் உயர்த்துவோம். தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக்கல்லூரியை கட்டி திறப்போம். ஆகவே கடலூரில் போட்டியிடும் வேட்பாளர் அய்யப்பனை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.
இதில் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, வி.ஆர். அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story