வேட்பாளர்களுக்கான தேர்தல் வழிமுறைகள்- ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சமீரன் விளக்கம்
வேட்பாளர்களுக்கான தேர்தல் வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் தென்காசியில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சமீரன் கலந்துகொண்டு விளக்கம் அளித்தார்.
தென்காசி, மார்ச்:
தென்காசி மாவட்ட வேட்பாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆலோசனை கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டம்
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். தேர்தல் பார்வையாளர்கள் (பொது) டாக்டர் ராஜூ நாராயணசுவாமி, பிரகாஷ் பிந்து, டாக்டர் வேதபதி மிஸ்ரா மற்றும் மாவட்ட பார்வையாளர் (காவல்துறை) திலீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் சமீரன் பேசியதாவது:-
வேட்பாளர்கள் தங்களுக்கான தேர்தல் முகவர்கள், வாக்குப்பதிவு முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்களை சரியான படிவத்தில் சரியான நேரத்தில் நியமிக்க வேண்டும். வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் முகவர்களை முந்தைய பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதியற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளரா? என்பதையும், தகுதியானவர்தானா? என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
வாக்காளர்கள் தவிர, வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் தேர்தல் வாக்குப்பதிவு முகவர்கள் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்ட அங்கீகாரகடிதம் உள்ளவர்கள் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் செல்ல முடியும். ஒரு வாக்காளர் அல்லது அந்தத் தொகுதியிலிருந்து ஒரு வேட்பாளர் அல்லது வேட்பாளரின் தேர்தல் முகவராக இல்லாவிட்டால் பிரசார காலம் முடிந்ததும் வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
அனுமதி பெற வேண்டும்
வேட்பாளர்கள் அவர்களது வாக்குப்பதிவு முகவர்களுக்கு வாக்காளர் பட்டியலின் நகல்களை வழங்க வேண்டும். வேட்பாளர்கள் தங்கள் முகவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலரால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரால் நடத்தப்படும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் தொடர்பான அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொள்ள வேண்டும். தேர்தல் சம்பந்தப்பட்ட கூட்டங்களுக்கு ஒலிபெருக்கிகள் அல்லது அதுபோன்ற ஏதேனும் வசதிகளைப் பயன்படுத்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும்.
வேட்பாளர்கள், வேட்பாளராக நியமனம் செய்யப்பட்ட தேதி முதல் தேர்தல் தேதி வரை தேர்தல் செலவுகள் குறித்த சரியான கணக்குகளை தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட உரிய பதிவேட்டில் பராமரித்து வைத்திருக்க வேண்டும்.
புகார் அளிக்கலாம்
வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அடையாள சீட்டுகள் வெற்று (வெள்ளை) தாளில் இருக்க வேண்டும். அதில் சின்னம், வேட்பாளரின் பெயர் அல்லது கட்சியின் பெயர் ஆகியவை இருக்கக்கூடாது. தேர்தல் தொடர்பான எந்தவொரு புகாரையும் இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனிசவுந்தர்யா, வேட்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story