ரூ.1 கோடி சிக்கிய விவகாரம் குறித்து வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை
திருச்சி பெட்டவாய்த்தலை அருகே ரூ.1 கோடி சிக்கிய விவகாரம் குறித்து வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி பெட்டவாய்த்தலை அருகே ரூ.1 கோடி சிக்கிய விவகாரம் குறித்து வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரூ.1 கோடி பறிமுதல்
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை சோதனை சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் இருந்த சாக்குப்பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கட்டுகள் இருந்தன. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக பணம் கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
உடனடியாக இது பற்றி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்ததோடு, காரில் வந்த 4 பேரையும் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணிப்பார்த்தனர். அதில், ரூ.99 லட்சத்து 73 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 4 பேரிடமும் விசாரித்தனர்.
காரில் வந்த கும்பல்
விசாரணையில் அவர்கள், முசிறியை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன் உள்பட 4 பேர் என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் தங்களுக்கும் பிடிபட்ட பணத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தனர்.
மேலும், தாங்கள் குளித்தலையில் இருந்து முசிறிநோக்கி காரில் சென்று கொண்டு இருந்தபோது, பெட்டவாய்த்தலை சோதனை சாவடி அருகே 2 காரில் வந்தவர்கள் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்ததாகவும், இதனால் அங்கு காரை நிறுத்தி வேடிக்கை பார்த்து கொண்டு இருந்ததாகவும், போலீசாரை கண்டதும் அந்த கும்பல் காரில் ஏறி தப்பி சென்றதாகவும், அவர்கள் தகராறு செய்து கொண்டு இருந்த இடத்தின் அருகே சாக்குப்பையில் அந்த பணம் கிடந்ததாகவும் தெரிவித்தனர்.
எம்.எல்.ஏ. மகன் கார்
மேலும், தொடர்ந்து அவர்கள் 4 பேரும் ஓட்டி வந்த கார் யாருடையது? என போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அந்த கார் ராமமூர்த்தி என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்ததும், அவர் முசிறி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செல்வராசுவின் மகன் என்பதும் தெரியவந்தது.
உடனே இது குறித்து வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கு சென்று சாக்குப்பையில் சிக்கிய பணம் குறித்து 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “சாக்குப்பையில் ரூ.1 கோடி சிக்கியது தொடர்பாக இதுவரை முறைப்படி எந்த புகாரும் வரவில்லை என்றும், இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு விரிவான அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளதாகவும்” அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் திருச்சியில் கேட்பாரற்று சாக்குப்பையில் ரூ.1 கோடி சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story