கருப்புக்கொடிகள் கட்டி பதாகைகள் ஏந்தி கிராம மக்கள் போராட்டம்
கருப்புக்கொடிகள் கட்டி, பதாகைகள் ஏந்தி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சில்லகுடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் காமாண்டி திருவிழாவை முன்னிட்டு வருகிற 28-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று நடத்த நிபந்தனையுடன் கூடிய அனுமதியை சென்னை ஐகோர்ட்டு அளித்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு, கிராம மக்கள் சார்பில் மனு கொடுத்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சில்லக்குடி கிராமத்தில் இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததை கண்டித்து, நடைபெற உள்ள தேர்தல் வேண்டாம், ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பாதாகைகளை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர். மேலும் ஊரில் உள்ள தெருக்கள் மற்றும் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த குன்னம் போலீசார், அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது இளைஞர்கள், மற்ற மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியும் உள்ளனர். நாங்கள் கோர்ட்டில் அனுமதி பெற்றும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்து சென்றனர்.
Related Tags :
Next Story