இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கொளுத்தும் வெயிலில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்


இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கொளுத்தும் வெயிலில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்
x
தினத்தந்தி 25 March 2021 5:16 AM IST (Updated: 25 March 2021 5:16 AM IST)
t-max-icont-min-icon

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கொளுத்தும் வெயிலில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

ஈரோடு
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கொளுத்தும் வெயிலில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. 
இறுதி வேட்பாளா் பட்டியல்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு, வேட்பாளர்களை அறிவித்தல், தேர்தல் அறிக்கை வெளியிடுதல் போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. இதனால் தேர்தல் விறுவிறுப்படைந்தது.
இந்தநிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 128 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களுக்குரிய சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
துண்டு பிரசுரம்
அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க. கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணியினர், நாம் தமிழர் கட்சியினர் என அனைத்து வேட்பாளர்களும் பிரசார களத்தில் இறங்கிவிட்டனர். இதேபோல் முக்கிய தலைவர்களும் ஈரோட்டுக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
ஆளும் கட்சியினர் கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றிய நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார்கள். அதேசமயம் எதிர்க்கட்சியினர் தாங்கள் ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றிய வாக்குறுதிகளையும், ஆளும் கட்சியில் நிறைவேற்றப்படாத செயல் திட்டங்களையும் வாக்காளர்கள் மத்தியில் எடுத்துக்கூறி பிரசாரம் செய்கிறார்கள். இதேபோல் அனைத்து கட்சியினரும் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வாக்காளர்களிடம் கொண்டு செல்லும் வகையில், சின்னத்துடன் கூடிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து வருகின்றனர்.
வெயில் கொடுமை
இவ்வாறு ஈரோடு மாவட்டத்தின் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், வெயிலின் தாக்கமும் அதிகமாக காணப்படுகிறது. அனல் பறக்கும் பிரசாரத்துக்கு மத்தியில் ஈரோட்டில் வெயிலின் கொடுமையும் அனல் பறக்க விடுகிறது. இது ஓட்டு சேகரிக்க செல்பவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காகவே மதிய நேர பிரசாரத்தை வேட்பாளர்கள் உள்பட கட்சியினர் தவிர்த்து வருகிறார்கள். அவர்கள் காலை 7 மணியில் இருந்து பிரசாரத்தை தொடங்கி பகல் 11 மணி வரை மேற்கொள்கிறார்கள். பின்னர் மாலை 4 மணிக்கு மேல் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு வேட்டையில் ஈடுபடுகிறார்கள். வெயில் அதிகமாக காணப்படும் மதியம் வேளையில் கட்சி அலுவலகங்கள், தேர்தல் பணிமனையில் மற்ற பணிகளை கட்சியினரும், வேட்பாளர்களும் செய்து வருகிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரசாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story