3 தொகுதிகளுக்கு கூடுதலாக 1,585 பேலட் எந்திரங்கள் ஒதுக்கீடு


3 தொகுதிகளுக்கு கூடுதலாக 1,585 பேலட் எந்திரங்கள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 25 March 2021 5:26 AM IST (Updated: 25 March 2021 5:26 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 15 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் திருப்பூர் தெற்கு, பல்லடம், காங்கேயம் ஆகிய 3 தொகுதிகளுக்கு கூடுதலாக 1,585 பேலட் எந்திரங்கள் ஒதுக்கீடு செய்து அனுப்பி வைக்கப்பட்டன.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 15 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் திருப்பூர் தெற்கு, பல்லடம், காங்கேயம் ஆகிய 3 தொகுதிகளுக்கு கூடுதலாக 1,585 பேலட் எந்திரங்கள் ஒதுக்கீடு செய்து அனுப்பி வைக்கப்பட்டன.
3 சட்டமன்ற தொகுதிகள்
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் போட்டியிடும் இறுதிவேட்பாளர்கள் பட்டியல் மற்றும் அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. 15 வேட்பாளர்களுக்கு மேல் ஒரு தொகுதியில் வேட்பாளர்கள் போட்டியிட்டால் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் (பேலட் யூனிட்) பயன்படுத்த வேண்டும். 
அதன்படி திருப்பூர் தெற்கு தொகுதியில் 20 வேட்பாளர்களும், பல்லடம் தொகுதியில் 20 வேட்பாளர்களும், காங்கேயம் தொகுதியில் 26 வேட்பாளர்களும் போட்டியிடுவதால் அந்த 3 தொகுதிகளுக்கும் 2 பேலட் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
ஏற்கனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான 3 ஆயிரத்து 343 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டதில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டன.
1,585 பேலட் எந்திரங்கள்
தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்து அனுப்பிவைத்துள்ள நிலையில், மீண்டும் பேலட் எந்திரங்கள் திருப்பூர் தெற்கு, பல்லடம், காங்கேயம் தொகுதிகளுக்கு கணினி மூலமாக ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.
அதன்படி காங்கேயம் தொகுதியில் 372 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கூடுதலாக 447 பேலட் எந்திரங்களும், திருப்பூர் தெற்கு தொகுதியில் 401 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கூடுதலாக 481 பேலட் எந்திரங்களும், பல்லடம் தொகுதியில் 548 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கூடுதலாக 657 பேலட் எந்திரங்களும் என மொத்தம் 1,585 பேலட் எந்திரங்கள் பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சாகுல் அமீது பொது, முரளி தேர்தல், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் தாசில்தார் முருகதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story