குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 கிடைக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்; ஒரத்தநாடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் பிரசாரம்
குடும்பதலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 கிடைக்க இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு ஒரத்தநாடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் பிரசாரம் மேற்கொண்டார்.
வைத்திலிங்கம் பிரசாரம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவர் ஒரத்தநாடு தொகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று அ.தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.இந்த நிலையில் நேற்று அவர் ஒரத்தநாடு அருகே உள்ள ஊரச்சி கிராமத்தில் இருந்து நேற்று தனது பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக அந்த ஊரில் உள்ள காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திறந்த ஜீப்பில் கிராம் தோறும் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில்
ஈடுபட்டார்.
14 ஊராட்சிகளில் வாக்கு சேகரிப்பு
கண்ணந்தங்குடி மேலையூர், கண்ணந்தங்குடி கீழையூர், குலமரங்கம், ஒக்கநாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், காவரப்பட்டு, திருமங்கலக்கோட்டை, தொண்டராம்பட்டு, கண்ணுகுடி மேற்கு, கண்ணுகுடி கிழக்கு உள்பட ஒரத்தநாடு தெற்கு ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளை சேர்ந்த கிராமங்களிலும் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நல் ஆசியோடு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அ.தி.மு.க. வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினர்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்
டெல்டா பகுதியை பாதுகாக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து இன்று மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்றவற்றை எடுக்க முடியாத நிலையை அரசு ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.12 ஆயிரத்து 140 கோடியை அரசு தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்கள் இன்று விவசயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.மேலும் பல்வேறு முத்தான திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் அதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அதனை செயல்படுத்த முடியவில்லை. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் போது தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,500 வழங்கப்படும். விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கியது போல வாஷிங்மெஷின் வழங்கப்படும். விலையில்லா கேபிள் இணைப்பு வழங்கப்படும்.
இரட்டை இலை
இதே போன்று ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா கூறியது போல இந்த ஆட்சி இன்னும் 100 ஆண்டுகள் இருக்கும். அதற்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேட்பாளருடன் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர்கள் கோவி.தனபால், ரவிச்சந்திரன், மாவட்ட மகளிரணி செயலாளர் அமுதாரவிச்சந்திரன், அ.தி.மு.க. நிர்வாகி தவமணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கதிரவன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சீனி அசோகன், காவாரப்பட்டு துரை மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், அ.தி.மு.க.வினர் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story