மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மணிகண்டம் திருச்சியின் துணை நகரமாக மாறும்; அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் வாக்குறுதி
ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் மணிகண்டம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
கள்ளிக்குடியில் அவர் பிரசாரம் செய்த போது அவர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்ததுடன், அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்றும், குளத்துகரையில் சாலை, பஸ்வசதி அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தார். அத்துடன், மயானத்துக்கு செல்ல வாய்க்காலில் பாலம் அமைத்துதரப்படும் என்றார்.
மேலும் மணிகண்டம் மேக்குடி காலனியில் பேசும்போது,
மணிகண்டத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, மணிகண்டத்தை திருச்சியின் துணை நகரமாக மாற்றுவேன் என்று அவர் வாக்குறுதி அளித்தார். மேலும், தி.மு.க. ஆட்சியில் இயற்கை வளங்கள் அனைத்தும் சுரண்டப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் அவை அனைத்தும் காக்கப்படுகிறது. கள்ளிக்குடி அம்பேத்கர் நகர் மக்களுக்காக வீட்டுமனை பட்டா வழங்கப்படும். 30 ஆண்டுகள் ஒரே இடத்தில் இருந்தால் மட்டுமே வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என்பதற்கான காரணம், ஏழை மக்கள் தவிர வசதி படைத்தவர்கள் யாரும் இந்த சலுகையை அனுபவித்துவிடக்கூடாது என்பதற்காகதான் என்றார். மேலும் ஹரிபாஸ்கர் காலனி, கள்ளிக்குடி, மணிகண்டம், ஆலம்பட்டி, தீரன் மாநகர், மேல நாகமங்கலம், அண்ணாநகர், எம்.ஜி.ஆர். நகர், தென்றல் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது மணிகண்டம் ஒன்றிய செயலாளர் முத்துகருப்பண், த.மா.கா. ஒன்றிய செயலாளர் மகேஸ்வரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நல்லுசாமி மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story