லட்சுமி நாராயண சுவாமி கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை
திண்டுக்கல் அருகே லட்சுமி நாராயண சுவாமி கோவிலில், பல லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே லட்சுமி நாராயண சுவாமி கோவிலில் பல லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சுமி நாராயண சுவாமி கோவில்
திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் நான்கு வழிச்சாலையில், 10 கிலோமீட்டர் தூரத்தில் சின்னாளப்பட்டி பிரிவு உள்ளது. இங்குள்ள பிருந்தாவன தோப்பு என்னுமிடத்தில் பழமை வாய்ந்த லட்சுமி நாராயண சுவாமி கோவில் உள்ளது.
சின்னாளப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்களுக்கான சுவாமிக்கு கரகம் ஜோடிப்பது, சுவாமி புறப்பாடு ஆகியவை இந்த கோவிலில் இருந்து தான் தொடங்கும். மேலும் சித்திரை மாதத்தில் ராமஅழகர் திருவிழா இங்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பூட்டுகள் உடைப்பு
லட்சுமி நாராயண சுவாமி கோவில் பூசாரியாக சின்னாளப்பட்டியை சேர்ந்த நாகராஜ் உள்ளார். இவர் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடத்துவது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு, பூஜைகளை முடித்து விட்டு தனது வீட்டுக்கு சென்று விட்டார். மொபட்டை கோவில் அருகே நிறுத்தி விட்டு சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 6 மணி அளவில் பூஜை செய்வதற்காக நாகராஜ் கோவிலுக்கு வந்தார்.
கோவிலின் முன்பக்க கேட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது, கோவிலுக்குள் இருந்த கிரில் கேட்டின் பூட்டு, கோவில் கருவறை இரும்பு கேட் பூட்டு, மரக்கதவின் பூட்டு ஆகியவை உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரது மொபட்டும் மாயமாகி இருந்தது.
ஐம்பொன் சிலைகள் கொள்ளை
இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீசார் மற்றும் கோவில் நிர்வாகிகளுக்கு நாகராஜ் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கோவிலின் பக்கவாட்டில் இருந்த கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பிற கதவுகளின் பூட்டுக்களையும் உடைத்து கருவறைக்குள் சென்றனர். பின்னர் அங்கிருந்த ஐம்பொன்னால் ஆன ராமர், லட்சுமணர், சீதை ஆகிய 3 சிலைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
மேலும் கோவிலில் இருந்த ஐம்பொன்னால் ஆன சங்கு சக்கரம் மற்றும் செம்பு பாத்திரங்கள் ஆகியவற்றையும் மர்ம நபர்கள் அள்ளிச்சென்றனர்.
பல லட்சம் மதிப்பு
கொள்ளை போன 3 அடி உயரம் கொண்ட ராமர் சிலை 6 கிலோ எடை கொண்டது என்றும், 2½ அடி உயரம் உடைய லட்சுமணர் மற்றும் சீதையின் சிலைகள் தலா 4 கிலோ எடை உடையது என்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்த சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று போலீசார் கருதுகின்றனர். இதற்கிடையே சிலை கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர்.
கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் பொருத்தவில்லை. இதனால் துப்புத்துலக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் கோவில் அருகே உள்ள வீடுகளில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்களை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகள்
கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளை ஒரு மொபட்டில் ஏற்றி செல்வது போன்ற காட்சி, அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த மொபட், நாகராஜிக்கு சொந்தமானதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும் திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய், கோவிலில் இருந்து திண்டுக்கல்-மதுரை சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிரில் கேட்டுகளில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரசித்தி பெற்ற கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-------
Related Tags :
Next Story