‘தி.மு.க. இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல’- திருவண்ணாமலையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
‘தி.மு.க.இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல’ என்று திருவண்ணாமலையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருவண்ணாமலை
‘தி.மு.க.இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல’ என்று திருவண்ணாமலையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க. நேரடி போட்டி
மதசார்பற்ற கூட்டணி சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. நேரடியாக போட்டியிடுகிறது.
திருவண்ணாமலையில் எ.வ.வேலு, கீழ்பென்னாத்தூரில் கு.பிச்சாண்டி, செங்கத்தில் மு.பெ.கிரி, போளூரில் கே.வி.சேகரன், வந்தவாசியில் எஸ்.அம்பேத்குமார், கலசப்பாக்கத்தில் பெ.சு.தி.சரவணன், ஆரணியில் எஸ்.எஸ்.அன்பழகன், செய்யாறில் ஓ.ஜோதி ஆகியோரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் வாக்குகள் சேகரித்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
234 தொகுதிகளிலும் வெற்றி
இங்கு நடைபெறுவதை தேர்தல் பிரசார பொதுக் கூட்டமாக பார்க்கவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற வெற்றிவிழா கூட்டம் நடக்கிறது என்ற எண்ணம் எனக்கு வந்து விட்டது. தற்போது கருத்து கணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. 177, 180, 197 என தி.மு.க.வின் வெற்றி உயர்ந்து கொண்டே போகிறது. நான் கூட 200 என்று சொல்லி கொண்டு இருந்தேன்.
இந்த கூட்டத்தை பார்க்கும் பொழுது 234 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம் என்ற உணர்வு எனக்கு வந்து விட்டது.
தேர்தல் வருகிற போது மட்டும் வந்து போகிறவன் ஸ்டாலின் அல்ல. மதச்சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதியிலும் உதயசூரியன் போட்டியிடுகிறது. இதைவிட பாக்கியம் வேறு எதுவும் இல்லை. உங்களுக்கு கிடைக்கப் பெற்ற இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.
27 ஆயிரம் கோவில் பணியாளர்கள்
மலைகள் சூழ்ந்து இருக்கிற மாவட்டத்திற்கு ஸ்டாலின் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு பல வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறது. கோவில் குடமுழுக்கு செய்ய ரூ.1,000 கோடி, கோவில் பாதுகாப்பிற்காக 27,000 கோவில் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மலை கோவில்களுக்கு செல்ல வசதியாக கேபிள் கார் வசதி செய்யப்படும். கோவில் குளங்கள் தூர் வாரி நிரப்பப்படும். கோவில்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.
தமிழில் அர்ச்சனை திட்டம் விரிவுபடுத்தப்படும். கோவில்களில் உயர் நிலை ஆலோசனைக் குழு அமைக்கப்படும். கோவிலில் பணியாற்றும் பகுதிநேர ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவார்கள். ஆன்மிக சுற்றுலா செல்ல ஒரு லட்சம் பேருக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும். புனித நகரங்கள் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும். பூசாரிகள் நல வாரியத்தில் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். பூசாரிகள் ஓய்வூதியம் ரூ.4 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும்.
திருவண்ணாமலை கிரிவலபாதை கான்கிரீட் சாலையாக அமைக்கப்பட்டு இருபக்கமும் பசுமையான சூழல் உருவாக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மலைகளில் பசுமை காடுகள் வளர்க்க ஆவண செய்யப்படும்.
திருவண்ணாமலை தேர் செல்ல வசதியாக மின் கம்பிகள் அனைத்தும் தரையில் புதைவட மின்பாதையாக மாற்றி தரப்படும். இப்படி ஆன்மிக பணிகளை சிறப்பாக செய்யக் கூடிய ஆட்சி தான் என் தலைமையில் நடைபெற உள்ள தி.மு.க. ஆட்சி. நாம் ஆட்சிக்கு வந்து விட கூடாது என்று எண்ணுகிற சிலர் தி.மு.க. இந்து விரோத கட்சி என தொடர்ந்து பிரசாரம் செய்துவருகின்றனர்.
இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல
தி.மு.க. இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல. யாருடைய நம்பிக்கைக்கும் இடையூறாக இருந்தது கிடையாது. அனைவருக்கும் மதிப்பளிக்கக்கூடிய கட்சி. அனைவருக்கும் மதிப்பளித்து தான் தி.மு.க. ஆட்சி நடைபெறும் என்று நான் உறுதி அளிக்கிறேன். தமிழக மக்கள் அரசியலையும், ஆன்மிகத்தையும் வேறு வேறு என நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
பா.ஜ.க. இந்தியில் அவர்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தமிழகத்தில் பா.ஜ.க.வினர் இந்தியை திணிக்க பார்க்கிறார்கள். வட மாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பு அளித்து அதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள்.
அதனை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேடிக்கை பார்க்கலாம். நாங்கள் ஒருபோதும் வேடிக்கை பார்க்க மாட்டோம். இந்தியை திணிக்க கூடாது. இந்திக்கு என்றைக்கும் தி.மு.க. எதிரியல்ல. இந்தியை திணிக்க கூடாது என்பது தான் தி.மு.க.வின் கோரிக்கையாக உள்ளது.
குலகல்வியை கொண்டுவர முயற்சி
வடமாநிலத்தவர்களை வெறுக்கவில்லை. தமிழக வேலை வாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறுகிறோம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
அதைத்தான் நாங்களும் கூறுகிறோம். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் குலக் கல்வியை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.
நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு இடம் குறைந்து விட்டது. மேலும் மாநில அரசு தேர்வுகளையும் மத்திய அரசு பொதுத் தேர்வுகளாக நடத்துவோம் என்று சொல்கிறார்கள்.
வடமாநிலத்தவர்களை தமிழகத்தில் திணிக்க போகிறார்கள். 50 ஆண்டுகளாக பார்த்து, பார்த்து உருவாக்கிய தமிழகத்தை சிதைக்கப் பார்க்கிறார்கள். தமிழகத்தை தி.மு.க. பாதுகாக்கும்.
ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாங்கள் சொல்வது பதவி சுகத்திற்காக அல்ல. இங்கு நடைபெறும் அயோக்கியத்தனத்தை தடுத்து நிறுத்த முடியும்.
இளைஞர்கள் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும். இதை தேர்தலாக பார்க்காதீர்கள். தமிழகத்தை பாதுகாக்க நடக்கின்ற போர். இந்த போரில் வெற்றி பெற வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற போவதில்லை. ஆனால் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்று வந்து விடக்கூடாது.
தேர்தலில் வெற்றிபெறும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பா.ஜ.க., எம்.எல்.ஏ. வாக தான் இருப்பார்கள்.
பாடம் புகட்ட வேண்டும்
அன்று தமிழகம் சொன்னதை டெல்லி கேட்டது. இன்று டெல்லி சொல்வதை தமிழகம் கேட்கிறது. இந்த நிலையில் அ.தி.மு.க. உள்ளது.
ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க இந்தியா தவறிவிட்டது. ஈழத்தமிழர்களுக்கு அ.தி.மு.க., பா.ஜ.க. துரோகம் இழைத்துள்ளது. 2 கட்சிகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும். அதற்கு தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். தி.மு.க. ஆட்சியில் திருவண்ணாமலைக்கு பல்வேறு திட்டங்கள், சாதனைகள் செய்யப்பட்டுள்ளது.
அதனை மறந்து இருக்க மாட்டீர்கள். கொரோனா பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.4 ஆயிரம் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி வழங்க உள்ளோம். எனது வாக்குறுதிகள் அனைத்தையும் கண்டிப்பாக நிறைவேற்றி தருவேன்.
மாநில உரிமைகளை மீட்க வேண்டும்
தமிழ் மண்ணில் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க பார்க்கிறார்கள். தமிழகத்தில் மதவெறியர்கள் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அது நடக்கவே நடக்காது. இது திராவிட மண், பெரியார், அண்ணா, கலைஞர் வாழ்ந்த மண், மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் பலிக்காது.
மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. அதை மீட்க வேண்டும். உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு ஆட்சி மாற்றம் தேவை. சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும்.
தன் மானத்தை காப்பாற்ற மாநில சுயாட்சிக்கு ஆபத்து வருவதைத் தடுக்க மாநில உரிமைகளைப் பாதுகாக்க விவசாயிகள் வாழ்வுரிமையை பாதுகாக்க, தமிழகம் மீட்கப்பட தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story