கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ரூ.10 லட்சம் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி காரில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.10 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,
சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், நேற்று மாலை கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதித்தனர்.
அப்போது அதில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.10 லட்சம் பணம் இருப்பதை பறக்கும் படை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட ரூ.10 லட்சத்தை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகுருவிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் குமார், மகேஷ் ஆகியோர் முன்னிலையில் கும்மிடிப்பூண்டி சார்-நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார்.
அதே போல் நேற்று இரவு கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.94 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story