தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான 18 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது தி.மு.க.வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான 18 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது தி.மு.க.வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான 18 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் துறைக்கு தகவல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதற்காக 936 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள், வருமான வரித்துறையுடன் இணைந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பறக்கும் படையினருக்கு வரும் தகவல்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்களை திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. செயலாளரும், திருவண்ணாமலை தொகுதி வேட்பாளருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் துறைக்கு தகவல் வந்தது.
18 இடங்களில் சோதனை
இதுபற்றி தேர்தல் துறை, வருமானவரித்துறைக்கு தகவல் அனுப்பியது. அதன்பேரில் வருமான வரித்துறையினர் எ.வ.வேலு வீடு, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
எ.வ.வேலுவிற்கு திருவண்ணாமலையில் 2 என்ஜினீயரிங் கல்லூரிகள், 2 கலை அறிவியல் கல்லூரிகள், ஒரு பாலிடெக்னிக், ஒரு சர்வதேச பள்ளி மற்றும் கல்வி அறக்கட்டளை செயல்படுகிறது. கல்லூரிகளுக்கு சென்று முதலில் சோதனையை தொடங்கினர்.
திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, மினரல் நிறுவன அலுவலகம், சொந்த ஊரான சேக்கூடலூரில் உள்ள வீடு, குடிநீர் ஆலை பல்வேறு அலுவலகங்கள் என 18-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில்...
திருவண்ணாமலையில் நேற்று தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். இதையொட்டி மு.க.ஸ்டாலின் நேற்று திருவண்ணாமலைக்கு வந்து எ.வ.வேலுவின் கல்லூரியில் தங்கி இருந்தார். இன்று காலை அவர் பிரசாரத்தை தொடங்குவதற்காக வெளியே சென்ற சிறிது நேரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கு சென்று சோதனையை தொடங்கினர்.
மு.க.ஸ்டாலின் பிரசாரம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.
அவர்கள் பாதுகாப்பிற்காக உள்ளூர் போலீசாரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் நிறுத்தப்பட்டு இருந்தனர். அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்த பல்வேறு அறைகளிலும் சோதனை நடத்தினார்கள்.
அங்கிருந்த பெட்டிகள் மற்றும் சந்தேகப்படும் இடங்கள் பலவற்றிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் பணம் மற்றும் பொருட்கள் கிடைத்ததா என்பது குறித்து எந்த தகவலையும் வருமானவரித் துறையினர் வெளியிடவில்லை.
கல்லூரி கேட்டை பூட்டினர்
முன்னதாக வருமான வரித்துறை ேசாதனை நடந்த கல்லூரியில் இருந்து வெளியே வந்த மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பை உள்ளிட்ட உடைமைகளை போலீசார் தீவிரமாக சோதனை செய்த பின்னரே வெளியே அனுப்பினர்.
மேலும் சோதனை குறித்து தகவல் அறிந்ததும் கல்லூரி முன்பு குவிந்த கட்சியினர் மற்றும் பொதுமக்களை போலீசார் அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர். தொடர்ந்து கல்லூரி கேட்டை பூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே திருவண்ணாமலையில் பிரசாரத்தை முடித்துக்கொண்ட மு.க.ஸ்டாலின் மதியம் 12.15 மணி அளவில் மீண்டும் அதே கல்லூரிக்கு சென்றார். அங்கு மதிய உணவு சாப்பிட்டார்.
ஒரு பக்கம் வருமானவரித்துறை சோதனை நடந்து கொண்டு இருந்த அதே நேரத்தில் மற்றொரு பக்கத்தில் மு.க.ஸ்டாலின் அங்கிருந்தார்.
பரபரப்பு
பின்னர் மாலை 4.30 மணி அளவில் கல்லூரியில் இருந்து மு.க.ஸ்டாலின் புறப்பட்டு வெளியே சென்றார். அப்போது அவருடன் எ.வ.வேலு, கு.பிச்சாண்டி ஆகியோர் உடன் சென்றனர்.
தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்களில் வருமானவரி சோதனை நடந்தது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story