9 சட்டமன்ற தொகுதிகளிலும் கொரோனா பாதிப்பு ஏற்படும் வேட்பாளர்களை பிரசாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
கொரோனா பாதிப்பு ஏற்படும் வேட்பாளர்களை பிரசாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது
கடலூர்,
9 சட்டமன்ற தொகுதிகளிலும் கொரோனா பாதிப்பு ஏற்படும் வேட்பாளர்களை பிரசாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டார்.
ஆய்வுக்கூட்டம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கலால் அலுவலர்கள், வருமான வரித்துறை அலுவலர்கள், கணக்கு அலுவலர்கள் உள்பட தேர்தல் தொடர்பான அனைத்து அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார். இதில் திட்டக்குடி, விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் பிரகாஷ், நெய்வேலி, பண்ருட்டி சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் சஞ்சீவ் கவுசிக், கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதி பொது பார்வையாளர் ஓம்பிரகாஷ், புவனகிரி, சிதம்பரம் தொகுதி பார்வையாளர் ராஜேஷ்குமார், காட்டுமன்னார்கோவில் பொது பார்வையாளர் பவானி சிங் கங்க்ரூட், போலீஸ் பார்வையாளர் பன்வர்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்காணிப்பு கேமரா
கூட்டத்தில், நிலையான கண்காணிப்பு குழு, பறக்கும் படையினர் மேற்கொள்ளப்பட வேண்டிய கண்காணிப்பு பணிகள் குறித்தும், வருமான வரித்துறை மற்றும் மதுவிலக்கு துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் அறிவுறுத்தினர்.
மேலும் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சக்கரநாற்காலி, சாய்தளம் அமைத்து கொடுக்கவும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், போலீசார் மூலம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தவும், துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர், பார்வையாளர்கள் அறிவுறுத்தினர்.
கொரோனா
தொடர்ந்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மருத்துவ அலுவலர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். வேட்பாளர்கள் மற்றும் அலுவலர்கள், அவர்களை சார்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை பிரசாரத்திலும், பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. உடனே அவர்களை தனிமைப்படுத்தி, கண்காணிக்க வேண்டும். வாக்குப்பதிவு அன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் வழிகாட்டுதலை அனைத்து நிலை அலுவலர்களும் கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், தேர்தல் வருமான வரி அலுவலர் நெடுமாறன், மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மதுவிலக்கு அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story