ரெயில் பாதையில் கம்பங்களுக்கு இடையே மின்கம்பிகளை இணைக்கும் பணி மும்முரம்
பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தில் ரெயில் பாதையில் கம்பங்களுக்கு இடையே மின்கம்பிகளை இணைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி,
திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக போத்தனூர் மற்றும் பாலக்காடு இடையேயான மீட்டர் கேஜ் ரெயில் பாதை, அகலரெயில் பாதையாக மாற்றப்பட்டது. இதற்கிடையில் திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக உள்ள போத்தனூர், பாலக்காடு இடையேயான ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
போத்தனூர்-பொள்ளாச்சி ரெயில்பாதையை மின் மயமாக்க ரூ.37 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதேபோன்று திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரையிலான ரெயில் பாதைக்கு ரூ.159 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி-போத்தனூர் இடையேயான ரெயில்வே மின் மயமாக்கல் பணிக்கு கம்பங்கள் நடும் பணி வேகமாக நடைபெற்று வந்தது. இந்த வழித்தடத்தில் மின் மயமாக்கல் பணிக்கு 906 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மின் கம்பங்களும் 400 கிலோ எடையும், 9.5 மீட்டர் உயரமும் உள்ளன. இந்த திட்ட பணிக்காக சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து மின் கம்பங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. தற்போது மின் கம்பங்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்று உள்ளது.
இதை தொடர்ந்து என்ஜினுடன் ஒரு நவீன பெட்டி இணைக்கப்பட்டு உள்ளது. இதன் உதவியுடன் ரெயில் பாதையில் கம்பங்களுக்கு இடையே மின்கம்பிகளை இணைக்கும் பணி கடந்த 2 நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஒரு வார காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் மேலும் கிணத்துக்கடவு, செட்டிப்பாளையம் ஆகிய இடங்களில் 2 சுவிட்ச் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த பணிகள் முடிந்த பிறகு போத்தனூர்-பொள்ளாச்சி வழித்தடத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story