மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
வால்பாறை அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கெஜமுடி எஸ்டேட் கீழ்பிரிவு பகுதியில் ஸ்ரீமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா, கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜை நடைபெற்றது.
நேற்று முன்தினம் சக்தி கரகம் அழைத்து வருதல், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜை, முதல் கால யாக பூஜை, விக்கிரக பிரதிஷ்டை, சுவர்ண ஸ்தாபனம் ஆகியன நடைபெற்றது.
மகா தீபாராதனை
இந்த நிலையில் நேற்று காலை 2-ம் கால யாக பூஜை, மூலமந்திர ஹோமம், நாடிசந்தானம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கரகோஷமிட்டவாறு தரிசித்தனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தச தரிசனம், அலகோபூஜை, திருமாங்கல்யதாரணம், மகா தீபாராதனை நடந்தது. முன்னதாக பக்தர்கள் தீர்த்த குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது.
பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. இதில் வால்பாறை, முடீஸ் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story