தினத்தந்தி செய்தி எதிரொலி காரமடையில் சாக்கடை கால்வாய் சீரமைப்பு


தினத்தந்தி செய்தி எதிரொலி காரமடையில் சாக்கடை கால்வாய் சீரமைப்பு
x
தினத்தந்தி 26 March 2021 12:39 AM IST (Updated: 26 March 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக காரமடையில் சாக்கடை கால்வாய் சீரமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

காரமடை,

காரமடையில் வாரச்சந்தை, ஏராளமான கடைகள், பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் ஆகியவை உள்ளது.

 மேலும் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் வெளியூர் செல்ல காரமடைக்கு வர வேண்டும். இதன் காரணமாக காரமடை பஸ்நிறுத்தத்தில் எப்போதுமே பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். 

இந்த நிலையில் காரமடை பஸ் நிறுத்தம் அருகே சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டு உள்ள சாக்கடை கால்வாய் நிரம்பி சாலையில் கழிவுநீர் குளம்போல தேங்கியது. 

இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

இது குறித்து ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன்படி தற்போது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதை சரிசெய்து உள்ளனர். 

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- 

காரமடை பஸ்நிறுத்தம் அருகே கழிவுநீர் தேங்கியதால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது பொதுமக்கள் மீது கழிவுநீர்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

இது குறித்து தினத்தந்தியில் செய்தி வெளிவந்ததால், காரமடை பேரூராட்சி செயல் அதிகாரி சுரேஷ்குமார் தலைமையில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் மாரியப்பன், மேற்பார்வையாளர் கார்த்திக் மற்றும் தூய்மை பணியாளர்கள் அந்த சாக்கடை கால்வாயை சீரமைத்தனர். இதனால் அங்கு கழிவுநீர் தேங்குவது தவிர்க்கப்பட்டது. 

இதனால் இந்த வழியாக செல்பவர்கள் மகிழ்ச்சியுடன் செல்கிறார்கள். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் எங்களது பாராட்டுக்கள். 

மேலும் இதுபோன்று பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அதிகாரிகள் கண்காணித்து செயல்பட வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story