நகராட்சி ஊழியர்கள்- பா.ஜனதாவினர் மோதல்
குளச்சலில் முக கவசம் அணியாததால் அபராதம் செலுத்த கூறியதால் நகராட்சி ஊழியர்கள், பா.ஜனதாவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் குளச்சலில் பரபரப்பு ஏற்பட்டது.
குளச்சல்,
குளச்சலில் முக கவசம் அணியாததால் அபராதம் செலுத்த கூறியதால் நகராட்சி ஊழியர்கள், பா.ஜனதாவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் குளச்சலில் பரபரப்பு ஏற்பட்டது.
சோதனை
குளச்சல் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் கீதா, பொதுப்பணி மேற்பார்வையாளர் பிரம்ம சக்தி மற்றும் ஊழியர்கள் நேற்று அண்ணாசிலை சந்திப்பில் முககவசம் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து கொண்டிருந்தனர்.
அப்போது திங்கள்நகரில் இருந்து குளச்சல் நோக்கி வந்த ஒரு காரை ஊழியர்கள் நிறுத்தினர். காரில் கன்னியாகுமரி நாடாளுமன்ற பா.ஜனதா தேர்தல் பார்வையாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட 4 பேர் இருந்தனர். அவர்களில் 2 பேர் முககவசம் அணியவில்லை. எனவே நகராட்சி ஊழியர்கள் அபராதம் செலுத்த கூறினர். அதற்கு காரில் இருந்தவர்கள் வாக்குவாதம் ெசய்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். கார் புறப்பட தயாரானதும் நகராட்சி ஊழியர் ஒருவர் கார் கதவை திறந்து அபராதம் செலுத்திவிட்டு செல்லுமாறு கூறினார். அப்போது காரில் இருந்த ஒருவர் நிலை தடுமாறி கீழே விழப்போனார்.
மீண்டும் தகராறு
இதையடுத்து நகராட்சி ஊழியர்களுக்கும் பா.ஜனதா நிர்வாகிகளுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகவலறிந்த பா.ஜனதா உள்ளூர் நிர்வாகிகள் அங்கு விரைந்தனர். இதனால் அங்கு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் புகார் அளிக்க போலீஸ் நிலையம் சென்றனர். தகவல் அறிந்த குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி போலீஸ் நிலையம் சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story