ரேஷன் அட்டைகளை ஒப்படைக்க கிராம நிர்வாக அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்
சில்லக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தராததை கண்டித்து ரேஷன் அட்டைகளை ஒப்படைக்க கிராம நிர்வாக அலுவலத்தில் பொதுமக்கள் திரண்டனர். மேலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தராவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
குன்னம்:
ஜல்லிக்கட்டு நடத்த தடை
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சில்லக்குடி கிராமத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்தனர். இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து சில்லக்குடி ஜல்லிக்கட்டு அமைப்பினர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றனர். இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டனர்.
அனுமதிக்க கோரிக்கை
ஆனால் மாவட்ட நிர்வாகம், சில்லக்குடியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுத்தது. தேர்தல் ேததி அறிவிக்கப்பட்ட பின்பும் பரிசுகள் வழங்காமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருவதாகவும், அதேபோல் தங்கள் ஊரிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும் அனுமதி கிடைக்காததால் வேதனை அடைந்த மக்கள் நேற்று முன்தினம் திடீரென ஊரின் அனைத்து வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
போராட்டம்
ஆனால் அதன் பின்னரும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் நேற்று திடீரென கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து தங்களது ரேஷன் அட்டைகளை கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
இதற்காக அவர்கள் ரேஷன் அட்டைகளுடன் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். ஆனால் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு வராததால் அலுவலக வாசல்படியில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக சில்லக்குடியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தராவிட்டால் நடைபெறவுள்ள தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story