நெல்லையில் வாகன சோதனை: மீன் வியாபாரியிடம் ரூ.1.44 லட்சம் பறிமுதல்
நெல்லையில் நடத்திய வாகன சோதனையில் மீன் வியாபாரியிடம் இருந்து ரூ.1.44 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பேட்டை, மார்ச்:
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடை செய்யும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை நடத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோட்ட கலால் உதவி ஆணையர் சிதம்பரம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நெல்லை பழைய பேட்டை போலீஸ் சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்தனர். அந்த மினி லாரியில் டிரைவரின் இருக்கைக்கு அடியில் ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 100 இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மினி லாரியில் இருந்த கேரள மாநிலம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த மீன் வியாபாரியான சுஸ்ருதீன் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் கொள்முதல் செய்வதற்காக பணத்தை எடுத்து செல்வதாக தெரிவித்தார். அந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நெல்லை உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அங்கிருந்து அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story