தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைப்பது உறுதி எதிர்க்கட்சி யார்? என்பதில் காங்கிரஸ்- அ.தி.மு.க.வுக்கு போட்டி; ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது, எதிர்க்கட்சியாக உட்காருவது காங்கிரஸ் கட்சியா, அ.தி.மு.க.வா என்பதுதான் தற்போதைய போட்டி என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
ஈரோடு
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது, எதிர்க்கட்சியாக உட்காருவது காங்கிரஸ் கட்சியா, அ.தி.மு.க.வா என்பதுதான் தற்போதைய போட்டி என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
பொதுக்கூட்டம்
ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் சு.முத்துசாமி (ஈரோடு மேற்கு), திருமகன் ஈவேரா (ஈரோடு கிழக்கு) ஆகியோரை ஆதரித்தும், உதயசூரியன், கை சின்னங்களுக்கு வாக்குகள் கேட்டும் திராவிடர் கழகம் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் கு.சிற்றரசு தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் சு.முத்துசாமி, ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா ஆகியோருக்கு வாக்குகள் சேகரித்து தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.
மோடியா -லேடியா
அப்போது அவர் கூறியதாவது:-
நடைபெற உள்ள தேர்தல் மிகப்பெரிய யுத்தம். சர்வாதிகாரியாக வரத்துடிக்கும் மோடிக்கும், ஜனநாயகத்தையும், ஒருமைப்பாட்டையும், சமூக நீதியையும் பாதுகாக்கும் சக்திகளுக்கும் இடையில் நடக்கும் போராக இந்த தேர்தல் நடக்கிறது.
நான் கடந்த காலங்களில் ஜெயலலிதாவை பல முறை விமர்சித்து இருக்கிறேன். அவரைப்பார்த்து பயந்தது இல்லை. அதற்காக அவர் என்னை ஒருபோதும் தாக்கியது இல்லை. அவர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதையும் உண்டு. பெண் சிங்கமாக இருந்தவர். மோடியைப்பார்த்து, மோடியா இந்த லேடியா என்று பேசிய வீராங்கனை அவர்.
அயோக்கியர்கள்
ஆனால் அவரிடம் பணிபுரிந்த ஒருவரின் கால்களில் பாம்பைப்போல ஊர்ந்து சென்று, இன்று பா.ஜனதாவுடன் வலம் வந்து கொண்டிருப்பவர்களுக்கு் எதிராக இந்த தேர்தல் நடக்கிறது. மோடி எல்லா வகையிலும் இந்த நாட்டுக்கு தீங்கு இழைத்து உள்ளார். பொருளாதாரம், அரசியல், சமூகநீதி மட்டுமின்றி கல்வியையும் முடக்கிப்போட்டு இருக்கிறார். அவரது ஆட்சியில் அவரது தாடி மட்டும்தான் வளர்ந்து இருக்கிறது. மோடியை ஓட ஓட தென்னகம், குறிப்பாக தமிழகம் நிமிர்ந்து நிற்கிறது என்பதை இந்த தேர்தல் காட்டப்போகிறது.
இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கும், அ.தி.மு.க.வுக்கும் நடக்கும் போர். தி.மு.க. ஆட்சியை பிடிக்கும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைப்பார் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. ஆனால் எதிர்க்கட்சியாக யார் இருப்பது என்பதில்தான் காங்கிரசுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையே போட்டி உள்ளது.
உங்கள் ஊழியர்
எனது அரசியல் வாழ்வில் நான் பார்த்ததுவரை, ஈரோடு மாவட்டத்துக்கு தி.மு.க. வேட்பாளர் முத்துசாமியை போல அதிக நன்மைகள் செய்தவர்கள் யாரும் இல்லை. இப்போது எனது மகன் திருமகன் ஈவெரா வேட்பாளராக உங்கள் முன் உள்ளார். அவர், முத்துசாமி அளவுக்கு செயலாற்ற முடியாது என்றாலும் அவர் அருகிலாவது நிற்க முடியும் என்று நம்புகிறேன். எனது மகன் திருமன் ஈவேராவை ஈரோடு மக்களிடம் ஒப்படைத்து விட்டேன், அவர் உங்கள் ஊழியர். அவரை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.
இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திருப்பூர் தொகுதி கே.சுப்பராயன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் காங்கிரஸ், தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்கள்.
Related Tags :
Next Story