பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் கமிஷனர் ஆய்வு


பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் கமிஷனர் ஆய்வு
x
தினத்தந்தி 26 March 2021 3:03 AM IST (Updated: 26 March 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் கமிஷனர் அன்பு ஆய்வு நடத்தினார்.

நெல்லை, மார்ச்:
நெல்லை சந்திப்பில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் கமிஷனர் அன்பு ஆய்வு நடத்தினார்.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அங்கு தேர்தலின் போது கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.

போலீஸ் கமிஷனர் ஆய்வு

இதற்காக பதற்றமான வாக்குச்சாவடிகளை அந்தந்த பகுதி உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு நேற்று நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்தார்.

சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி, உடையார்பட்டி மாநகராட்சி பள்ளி, அங்கன்வாடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு ஓட்டுப்பதிவின் போது போலீசாருடன், துணை ராணுவ வீரர்களையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது, அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பது குறித்து ஆய்வு செய்தார்.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அன்பு நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாநகரில் 73 இடங்களில் 109 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டனர். தற்போது பதற்றமான வாக்குச்சாவடிகளில் நானும் ஆய்வு செய்து உள்ளேன். அங்கு என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் தேவை? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அச்சமின்றி வாக்களிக்கலாம்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் உள்ளூர் போலீசார் தவிர துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேவையான இடங்களில் கூடுதலாக பட்டாலியன் போலீசாரும் நிறுத்தப்படுவார்கள். இதுதவிர போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அந்த பகுதியில் தொடர்ந்து சுற்றி வருவார்கள்.

நெல்லை மாநகரை பொறுத்தவரை இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்கள் அனைத்தும் பாதுகாப்பாகவே நடந்து முடிந்துள்ளன. இந்த சட்டமன்ற தேர்தலும் எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் சுமூகமாக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. எனவே வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது ஒரு பள்ளியில் முதியோர் கல்வி திட்டத்தின் கீழ் படித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு கமிஷனர் அன்பு பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
ஆய்வின் போது துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சீனிவாசன், டவுன் உதவி கமிஷனர் சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Next Story