தமிழ்நாட்டை பசுமை தாயகமாக மாற்ற நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்; கோபியில் சீமான் பேச்சு
தமிழ்நாட்டை பசுமை தாயகமாக மாற்ற நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கோபியில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
கடத்தூர்
தமிழ்நாட்டை பசுமை தாயகமாக மாற்ற நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கோபியில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
சீமான் பிரசாரம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த வேட்பாளர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு கேட்டு அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று வாக்கு சேகரித்தார்.
கோபி சட்டமன்ற தொகுதியில் சீதாலட்சுமி என்பவரும், பவானிசாகர் தொகுதியில் சங்கீதா என்பவரும் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோபி பஸ்நிலையத்தில் நேற்று மாலை திறந்த வேனில் நின்றவாறு வாக்கு சேகரித்தார். அவர் பேசியதாவது:-
இலவசங்களை வழங்கினால்...
ஆட்சியில் மாற்றம் வேண்டும் என்ற சிந்தனையில் தொடங்கியது தான் நாம் தமிழர் கட்சி. தமிழகத்தை பல்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சி செய்துள்ளன. குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சியை மாற்றிக் கொண்டு பல்வேறு ஊழல்களை செய்துள்ளன.
தமிழகத்தில் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது வாக்குறுதிகளாக பல்வேறு இலவசங்களை வழங்குவதாக அறிவித்துள்ளன. இலவசம் என்பது இந்த தேசத்தை நாசமாக்கும் திட்டம் ஆகும். ஏற்கனவே தமிழகம் 6 லட்சம் கோடி ரூபாய் கடனில் மிதக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து இலவசங்களை வழங்கினால் நாடு என்ன ஆவது?
பசுமை தாயகமாக மாற்றுவோம்
தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கட்சியாக உள்ளது. அரசியல் என்பது மக்களுக்கான சேவையாகும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நிறைவேற்றப்படும் திட்டங்களில் முதன்மையானதாக அரசு பள்ளிக்கூடம் மற்றும் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
உலகின் தலை சிறந்த நாடாகவும், 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை பசுமை தாயகமாக மாற்றவும், உங்கள் எதிர்காலம் சிறக்கவும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு சீமான் பேசினார்.
Related Tags :
Next Story