மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது; பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி பேச்சு
மற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது என மொடக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி. பேசினார்.
மொடக்குறிச்சி
மற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது என மொடக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி. பேசினார்.
தேர்தல் பிரசாரம்
தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதேபோல் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் சரஸ்வதியை ஆதரித்து மொடக்குறிச்சி நால்ரோட்டில் அந்த கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான சி.டி.ரவி, திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
அதிக நிதி ஒதுக்கி...
மோடி தலைமையிலான மத்திய அரசு மற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது.
தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரிகள், ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலைப்பணிகள், நீர்மேலாண்மை திட்டம், விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தியது, 12 ஸ்மார்ட் சிட்டி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, முத்ரா கடன் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கி உள்ளது.
மேலும் தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2500, விவசாய கடன்கள் தள்ளுபடி உள்பட பல்வேறு திட்டங்களை வழங்கி உள்ளது. தற்போது, தேர்தல் அறிக்கையில் முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,500, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு தலா 6 சிலிண்டர்கள் இலவசம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
மக்கள் விரோத செயல்கள்
ஆனால் தி.மு.க. காங்கிரஸ் கட்சிகள் கட்டப்பஞ்சாயத்து, குடும்ப அரசியல், லஞ்சம், ஊழல், நில அபகரிப்பு போன்ற மக்கள் விரோத செயல்களுக்கு பெயர் பெற்றவை. எனவே அந்த கட்சிகளை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க.வும், காங்கிரசும் தான்.
கருத்துகணிப்பு என்பது ஒரு சர்வே அவ்வளவுதான். 2016-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.தான் வரும் என்றார்கள். ஆனால் அ.தி.மு.க.தான் வெற்றி பெற்றது.
இலங்கை தமிழர்களுக்கு இந்தியா பக்கபலமாக இருந்து வருகிறது. இலங்கை தமிழர்களின் உள்கட்டமைப்புக்காக ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட மதிப்பிலான அடிப்படை வசதிகளை இந்தியா செய்து கொடுத்து உள்ளது.
சாதி, மத வேறுபாடின்றி பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறார். ஆகவே தாமரை சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசார நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி உள்பட அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்த கொண்டனர்.
Related Tags :
Next Story